காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481
காக்கை தன்னிலும் வலிய கோட்டானைப் பகலில் வெல்லும். அதுபோல, பகைவரை வெல்லக் கருதும் அரசர்கட்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாததாகும்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. 482
காலத்தோடு பொருந்தத் தொழில் செய்தல், செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாகும்.
அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின். 483
வினைசெய்வதற்குரிய
கருவிகளுடன் ஏற்ற காலத்தை அறிந்து செய்தால், செய்தற்கரிய வினைகள் என்பன உண்டோ? இல்லை.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின். 484
ஒருவன் செய்யும் வினையை, ஏற்ற காலமறிந்து எற்ற இடத்துடன் பொருந்தச் செய்வானாயின், இவ்வுலக முழுவதையும் பெற நினைத்தாலும் அவன் பெறக் கூடும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 485
உலக முழுவதையும் கைப்பற்றக் கருதும் அரசர், ஏற்ற காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு அது வருமளவும் மனந்தளராமல் இருப்பர்.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. 486
ஊக்கமுடையான் பகை மேல் செல்லாது ஒடுங்கியிருப்பது, போர் செய்யும் செம்மறிக் கடா நன்றாகத் தாக்குதற்காகப் பின்னே கால் வாங்கும் தன்மையை ஒத்தது.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487
அறிவுடையோர் பகைவர் தீமை செய்த அப்போதே திடீரென வெளிப்படையாக வெகுளியைக் காட்ட மாட்டார். ஏற்ற காலத்தை எதிர்பார்த்து மனத்தில் சினங் கொண்டிருப்பர்.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. 488
தாம் வெல்லுதற் கேற்ற காலம் வரும்வரை, தாம் வெல்லக் கருதிய பகையரசரைக் கண்டால் பணிதல் வேண்டும். அப்பகைவருக்கு முடிவு காலம் வந்தால் அவர்கள் தலை கீழே விழும்.
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். 489
ஏற்ற காலம் வந்தால், அப்போதே தாம் செய்யக் கருதிய செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து. 490
வினைமேற் செல்லாது அடங்கியிருக்கும் காலத்தில் கொக்கைப் போல இருக்க வேண்டும். பின் வினைமேற் செல்லுங் காலத்தில் அக் கொக்குக் குத்துவது போலத் தப்பாமல் செய்து முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment