January 6, 2020

செங்கோன்மை


செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.    541

ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, யாவரிடத்தும் இரக்கங் காட்டாமல், தலைமை பொருந்தி, குற்றத்திற்குத் தக்க தண்டனையை ஆராய்ந்து செய்தலே முறையாகும்.   

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.    542

உலகத்து உயிரெல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும். மன்னவனது செங்கோலை எதிர்பார்த்து வாழ்வார்.   

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.     543

அறவோர் செய்த நூலுக்கும் அந்நூலில் கூறப்படும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்றது, அரசனது செங்கோல்.  
  
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.         544

குடிமக்களைத் தழுவிச் செங்கோல் செலுத்தும் பெருநில மன்னவனது அடியை, தழுவி நிற்பர் உலகத்தார்.   

இயல்புளிக் கோல்ஒச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.     545

பருவ மழையும் குறையாத விளைவும் ஒன்று சேர்ந்து, அற நூல்களில் சொல்லிய முறைப்படி செங்கோல் செலுத்தும் மன்னவனது நாட்டில் உளவாகும்.   

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூம் கோடாது எனின்.         546

அரசனுக்கு வெற்றியைத் தருவதுதான் தருவது அவன் வேல் அன்று, செங்கோலாகும். அச்செங்கோலும் வெற்றியைத் தருவது தான் கோணாதிருக்குமாயின்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.     547

அரசன் உலகத்தையயல்லாம் காப்பான். முறை தவறாமல் செங்கோல் செலுத்தினால் அவனை அச்செங்கோலே பாதுகாக்கும்.
    
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.            548

முறை வேண்டி வந்தாரின் காட்சிக்கு எளியனாய் அவர் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து முறை செய்யா அரசன், காலந் தாழ்த்தும் நிலையால் தானே கெடுவான்.    

குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.          549

குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காத்து, குடிகள் குற்றம் செய்தால் ஒறுத்து அக்குற்றத்தை நீக்குதல், அரசனுக்குக் குற்றமாகாது, அரசனது தொழிலாகும்.    

கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல்  பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.        550

அரசன் கொலையினால் கொடியவர்களைத் தண்டித்தல், உழவன் பயிர் நிலத்தில் முளைக்கும் களையைக் களைந்து பயிரை வளர்த்தற்கு ஒப்பாகும்.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...