January 6, 2020

குறிப்பறிதல்


 குறிப்பறிதல்

கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.                    701

ஒருவன் குறிப்பை அவன் கூறாமலே அவனை நோக்கி அறிபவன், எப்போதும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்திற்கு அணிகல மாவான். 

ஐயப் படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.                  702

ஒருவன் மனத்திலுள்ளதை ஐயமற அறியவல்லவனை, மேன்மை யாக மதிக்க வேண்டும்.

குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.                        703

தம் குறிப்பு நிகழ்வதை அறிந்த பழக்கத்தினால் பிறர் குறிப்பை அறிய வல்லவரை, அரசர் தம் உறுப்புக்களுள் அவர் விரும்புவ தொன்றைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்புஓ ரனையரால் வேறு.                       704

ஒருவன் மனத்தில் கருதியதை அவன் சொல்லாமல் அறிய வல்லாரோடு, குறிப்புணர மாட்டாதார், கைகால் முதலிய உறுப்புக் களினால் ஒரு தன்மையர் ஆயினும் வேறு அறிவால் வேறுபட்டவரே யாவர்.

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?                            705

எதிர்ப்பட்டதைக் காணவல்ல தம் காட்சியறிவினால், பிறர் முகக் குறிப்பைக் கொண்டு அவர் மனக் கருத்தை உணர மாட்டாவாயின், ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண் வேறு என்ன பயனைச் செய்வ னவோ அறியேன். குறிப்பிற் குறிப்புணராத கண்களால் பயனில்லை. 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.                             706

 தன்னை யடுத்த பொருளில் உருவத்தைத் தானே கொண்டு வந்து காட்டும் கண்ணாடிபோல, ஒருவனது நெஞ்சில் மிகுந்த எண்ணத்தை அவன் முகம் தானே கொண்டு காட்டிவிடும். 

முகத்தின் முதுக்குறைந்து உண்டோ? உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.                           707

ஒருவன் மகிழ்ந்தாலும் சினந்தாலும் அவற்றைத் தான் முதலில் தெரிவிக்குமாகலான், முகத்தைப் போல் அறிவுமிக்கது வேறொன்று உண்டோ? இல்லை.

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.                         708

தன் மனத்தைக் குறிப்பால் நோக்கித் தானுற்றதனை அறிய வல்லாரை ஒருவன் பெற்றால், அவர் தன் முகத்தைப் பார்க்கும்படி தான் அவர் முகத்தை நோக்கிக் கொண்டு நிற்றலே போதும்.

பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.                   709

பிறர் பார்வை வேறுபாட்டை அறிய வல்லார்க்கு, பிறர் மனத்துள்ள பகைமையும் நட்பையும் அவர் சொல்ல வேண்டிய தில்லை. அவர் கண்களே சொல்லும். 

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற.                             710

யாம் நுண்ணறிவுடையேம் என்பவர் பிறர் கருத்தினை அளக்கும் கோலாவது, ஆராயுங்கால், அவர் கண்ணல்லது வேறில்லை.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...