நாண் உடைமை
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. 1011
நல்லோர்களுக்கு உரிய நாணாவது இழிந்த செயல்களால் நாணுதல், மனமொழி மெய்களின் அடக்கத்தால் வரும் பிற நாண்கள் அழகிய நெற்றியை உடைய குலமகளிர் நாண்களாகும்.
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறல்ல
நாண்உடைமை மாந்தர் சிறப்பு. 1012
ஊணும் உடையும் இவை ஒழிந்த பிறவும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே. ஒழிந்தன: தூக்கம்,காமம்,அச்சம் என்பன.
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்னை குறித்தது சால்பு. 1013
எல்லா உயிர்களும் தங்களுடைய உடம்புகளை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. அது போலச் சால்பானது நாண் என்னும் நல்லியல்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
அணியன்றோ நான்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணியன்றோ பீடு நடை. 1014
சான்றோர்க்கு நாணுடைமை அழகாகும். அவ்வழகு இல்லை யாயின் அவர்களது பெருமித நடையானது கண்டார்க்கு வெறுப்பைத் தருவதாகும்.
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. 1015
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் வழியையும் ஒன்று போல எண்ணி நாணுபவர்களை, உலகத்தார் நாணுக்கு இருப்பிடம் என்று கூறுவர்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். 1016
உயர்ந்தோர் நாணத்தைத் தமக்குக் காவலாகக் கொள்வ தல்லாமல், பரந்த வையகத்தைக் கொள்ள விரும்பார்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாணதுறவார் நாண்ஆள் பவர். 1017
நாணமுடையோர், நாணத்தின் பொருட்டுத் தமது உயிரை விடுவர். உயிரின் பொருட்டு நாணத்தை விடார்.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. 1018
பிறர் நாணத்தக்க பழியைக் கண்டு நாணாது செய்வா னாயின், அறம் அவனை விட்டு நீங்கும் தகுதியை உடையது.
குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்
நாண்இன்மை நின்றக் கடை. 1019
ஒருவனுக்கு ஒழுக்கம் தவறுமாயின் அது அவனது குடிப் பிறப்பை மட்டும் கெடுக்கும். ஒருவனிடம் நாணின்மை நிலைபெறுமாயின் அத அவனுடைய நலம் அனைத்தையும் கெடுக்கும்.
நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று. 1020
நெஞ்சில் நாணமில்லார் இடம்விட்டுப் பெயர்தல், மரத்தினால் செய்த பாவை தன்னைக் கட்டிய கயிற்றால் இயங்கி உயிருள்ளது போல் மயக்கினாற் போன்றது.
No comments:
Post a Comment