January 6, 2020

தீ நட்பு


தீ நட்பு

பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.  811

கண்ணினால் பருகுவாரைப் போன்று தமக்கு அன்பு டையராய் இருக்கினும் தீக்குணமுடையார் நட்பு, பெருகுவதைக் காட்டிலும் குறைவது நல்லது.

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.    812

தமக்குப் பயனுண்டான போது உறவாடிப் பயனில்லாத போது நீங்கிவிடும் ஒப்பிலாரது நட்பினை, பெற்றால் உண்டாகும் நன்மை என்ன? இழந்தால் உண்டாகும் தீமை என்ன?   

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.            813

நட்பின் அளவைப் பாராது அந்நட்பால் வரும் பயனின் அளவைப் பார்க்கும் நண்பரும், கொடுப்பாரைக் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளைக் கொள்ளும் பொது மகளிரும், பிறர் கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும், தம்முளொப்பர்.

அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.            814

போர்வராத முன்னெல்லாம் வாங்கிப் போர்க்களத்தில் வீழ்த்திச் செல்லும் அறிவில்லாத குதிரையைப் போன்றோரது நட்பைக் காட்டிலும், தனிமையே சிறந்ததாகும்.
   
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.  815

நட்புச் செய்து வைப்பினும் தனக்குப் பாதுகாவலாகாத கீழ் மக்களது தீநட்பு, ஒருவனுக்கு உண்டாதலைக் காட்டிலும் உண்டாகாதிருத்தல் நல்லது.

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
எதின்மை கோடி உறும்.            816

அறிவில்லாதவனது மிகச் செறிந்த நட்பைக் காட்டிலும், அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது. 

நகைவகைய ராகிய நட்பின பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்.       817

அறிவு வகையராகாது நகை வகையாரோடு கொண்ட நட்பினால் வரும் இன்பங்களை விட, பகைவரால் வருந்துன்பங்கள் பத்துக்கோடி மடங்கு நல்லனவாகும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.    818

தம்மால் முடியுங் காரியத்தை முடியாததாக நடிப்பவரோடு கொண்ட நட்பினை, அவரறியச் சொல்லாமலே நழுவ விட்டுவிட வேண்டும்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.           819

வினையும் சொல்லும் பொருந்தாது வெவ்வேறாக இருப்பவர் நட்பானது, கனவிலும் துன்பந் தருவதாகும்.  

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.   820

தனியாக வீட்டில் இருந்த போது நட்புப் பாராட்டிப் பலர் முன்னிலையில் பழித்துப் பேசுவாரது நட்பினை, கொஞ்சங் கூடத் தம்மை அணுகுதலை நீக்குக. நட்பைக் கொஞ்சமுங்  கொள்ளக் கூடாது. 


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...