கல்லாமை
அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். 401
நிறைந்த நூல்களைக் கல்லாமல் அவையின்கண் ஒன்றைச் சொல்லுதல், சூதாடுதற்குரிய இடத்தை அமைக்காமல் சூதாடு கருவியை உருட்டினால் போன்றது.
கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402
கல்வி இல்லாதவன் அவையில் பேசுதலை விரும்புதல், இரண்டு முலையும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போலும்.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். 403
கற்றவர் முன்பு பேசாதிருப்பாராயின், கல்லாதவரும் மிகவும் நல்லவராவர். சொல்லாதிருந்தால் இவர் அறியாமை வெளிப்படா தென்பதாகும்.
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார். 404
கல்லாதவனுடைய அறிவு மிகவும் நன்றாயிருப்பினும் அறிவுடை யார் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 405
கல்லா ஒருவனது பெருமை, கற்றானொருவன் வந்து உரையாட மறைந்து விடும்.
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். 406
கல்லாதவர் இருக்கின்றனர் என்னும் அளவினை உடையவர் அல்லாது, விளையாத களர் நிலத்தை ஒப்பர்.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று. 407
நுட்பமான நல்ல பல நூல்களிலும் நுழைந்து பார்க்கும் அறிவு இல்லாதவனுடைய தோற்றமும் அழகும், மண்ணால் நன்றாகச் செய்த பொம்மையின் தோற்றமும் அழகும் போலும்.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 408
கல்லாதவரிடத்து நின்ற செல்வம், கற்றவரிடத்து நின்ற வறுமையை விடத் துன்பந் தருவதாகும்.
கல்வி கற்காதவர்களிடத்தில் சேர்ந்திருக்கிற செல்வமானது, நன்கு கற்றறிந்தவர் களிடத்தில் காணப்படும் வறுமையைக் காட்டிலும், மிகவும் துன்பத்தைப் பயக்கக் கூடியதாகும்.
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு. 409
கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ்குடியில் பிறந்தும் கற்றாரைப் போலப், பெருமை இல்லாதவராவர்.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410
விளங்கிய நூல்களைக் கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிட்டுப் பார்க்கின், விலங்குகளுடன் மக்களை ஒப்பிட்டுப் பார்க்கின் உள்ள வேறுபாடுடையவராவர்.
No comments:
Post a Comment