பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. 891
மேற்கொண்ட செயலை நன்கு முடிக்க வல்லவர்களது ஆற்றலை இகழாதிருத்தல், தம்மைக் காப்பவரது காவல்கள் எல்லாவற்றினும் சிறந்தது.
பெரியாரைப் பேணாது ஒழுகின பெரியாரால்
பேரா இடும்பை தரும். 892
பெரியார்களைப் போற்றாது நடப்பார்களாயின், அந் நடக்கை அவருக்கு நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. 893
ஒருவன் கெட விரும்பினால் வேற்றரசரை வெல்ல விரும்பினால் ஆராய்ந்து பாராது அதை அப்பொழுதே செய்ய வல்ல அரசர் களிடம் பிழை செய்க.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். 894
வலிமையுடையவர்க்கு
வலிமையில்லாதார் துன்பந் தருஞ் செயல்களைச் செய்தல், தானே வரும் கூற்றத்தை வருவதற்கு முன்னமே கைகாட்டி அழைத்தல் போலும்.
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். 895
வெய்ய வலிமை பொருந்திய வேந்தனால் வெகுளப் பட்டவர்கள், அவனைத் தப்பி எங்கே போனாலும் ஓரிடத்திலும் உயிருடன் இருக்க மாட்டார்கள்.
எரியாற் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896
நெருப்பினால் சுடப்பட்டாலும் ஒருவாறு உயிர் பிழைத்தல் கூடும். ஆனால் பெரியோர்க்குப் பிழை செய்து நடப்பவர் உயிர் பிழையார்.
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். 897
பெருமையினால் மாட்சிமை பொருந்திய பெரியார் வெகுள்வா ராயின், எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய வாழ்க்கையும் சிறந்த பொருளும் என்ன பயனுடையனவாகும்? கெடும் என்பதாம்.
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியயாடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. 898
மலை போன்ற பெருமை பொருந்தியவர் கெட எண்ணுவா ராயின், இவ்வுலகத்தில் நிலை பெற்றாற் போலத் தோன்றுபவர்கள் தமது குடியோடும் அழிந்து போவர்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். 899
உயர்ந்த கொள்கையையுடைய பெரியோர் வெகுளுவாராயின், அரசனும் இடையே தன்னிலையிழந்து கெடுவான்.
இறந்துஅமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரர் செறின். 900
நனிமிகு பெருமையுடையவர்கள் வெகுளுவராயின், மிகவும் பெரிய பக்கத் துணை உடையவராயினும் தப்ப மாட்டார்.
No comments:
Post a Comment