துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341
ஒருவன் எந்தெந்தப் பொருளின் மீதுள்ள பற்றினை நீங்கு கிறானோ, அவன் அந்த அந்தப் பொருளினால் துன்புறுதல் இல்லை.
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல. 342
துறந்த பிறகு இங்கு நுகரக் கூடிய இன்பங்கள் பலவாம். அவற்றையயல்லாம் நுகர விரும்பின் துறக்க வேண்டும்.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343
ஒருவன் ஐம்புலன்களையும் வெல்ல வேண்டும். தான் விரும்பிய பொருள்கள் யாவற்றையும் ஒருங்கே விட்டுவிட வேண்டும்.
இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. 344
யாதொரு பொருட்பற்றும் இல்லாமை துறவின் இலக்கண மாகும். ஏதேனும் ஒரு பற்றுடைமை மீண்டும் மீண்டும் பொருளாசையை உண்டு பண்ணும்.
மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை. 345
தீமையின் தோற்றங்களை நீக்கலுற்றார்க்கு உடம்பு மிகை யாயிருக்க, பின்னும் பற்றுதற்குரிய பொருள் யாது? ஒன்றுமில்லை.
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். 346
யான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப் பற்றையும் நீக்குபவன், வானோர்க்கும் அடைய முடியாத உலகத்தை அடைவான்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்ற விடாஅ தவர்க்கு. 347
பொருளின் மீதுள்ள ஆசையை விடாதவரை, துன்பங்களும் அவரைப் பற்றிக் கொண்டு விடா.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். 348
முற்றுந் துறந்தவர்களே பெருமையுடையவர்கள். முற்றுந் துறவாதவர் மயக்க மெய்தித் துன்பவலையில் அகப்பட்டவராவர்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். 349
துறவிக்குப் பொருளாசை நீங்காத போது, அப்பொருள்களின் நிலையாமை காணப்படும். அந்நிலையாமையுணர்ந்து பொருள் மீதுள்ள ஆசையை விட்ட உடனே, அவ்வாசையின்மை, அவ்வாசை யால் உண்டாகும் துன்பங்களின் தோற்றத்தை அறுக்கும். தோன்றாமல் செய்யும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350
பற்றற்றவனது அன்பை மனத்துட் கொள்க. ஆசையை ஒழித்ததற்கு அவ்வன்பையே உறுதியாகக் கொள்க.
No comments:
Post a Comment