வெஃகாமை
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 171
நடுவுநிலைமை இல்லாது பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் விரும்பினால், அவ்விருப்பம் அவன் குடியைக் கெடுத்துப் பல குற்றங்களையும் அப்போதே தரும்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவுஅன்மை நாணு பவர். 172
நடுவுநிலைமை அல்லாமைக்கு அஞ்சுவோர், தமக்கு உண்டாகும் பயனை விரும்பிப் பழியயாடு படுவனவற்றைச் செய்யார்.
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். 173
பேரின்பத்தை விரும்புவோர், பிறர் பொருளைக் கவர்தலால் உண்டாகும் சிற்றின்பத்தை விரும்பி அறம்அல்லாதவற்றைச் செய்யார்.
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர். 174
ஐம்புலன்களையும் வென்ற குற்றமற்ற அறிவினையுடையவர், தாம் ‘வறியேம்’ என்று பிறர் பொருளை விரும்புதல் செய்யார்.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். 175
பொருளை விரும்பி எல்லாரிடத்தும் அறிவோடு பொருந்தாத செயல்களை அறிவுடையோன் செய்வானாயின், அவனது கூரிய பரந்த அறிவால் யாது பயன்?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகி
பொல்லாத சூழக் கெடும். 176
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பொருளை விரும்பி அதைக் கொள்ளும் தீய வழிகளை எண்ணக் கெடுவான்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன். 177
பிறர் பொருளைக் கவர்ந்து அதனால் உண்டாகும் செல்வத்தை விரும்பாதொழிக. அதைத் துய்க்கும் போது அதன் பயன் நன்றாதல் இல்லை.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். 178
ஒருவனது செல்வம் குறையாமலிருப்பதற்குக் காரணம் யாதென்றால், பிறனுடைய கைப்பொருளை விரும்பாமையே யாகும்.
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு. 179
வெஃகாமையே அறமென அறிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரை, செல்வம் அவர் தகுதியறிந்து அப்போதே சேரும்.
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு. 180
எண்ணிப் பாராது பிறர் பொருளை ஒருவன் விரும்பின் அது அவனுக்கு அழிவைத் தரும். அப்பொருளை விரும்பாமை என்னும் பெருங்குணம் வெற்றியைத் தரும்.
No comments:
Post a Comment