மானம்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். 961
இன்றியமையாத சிறப்பை உடையனவாயினும், குடிபிறப்புக் குறையவரும் தொழில்களைச் செய்யாது விடுக.
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். 962
புகழுடன் பெரிய ஆண்மையை விரும்புபவர், அப்புகழைச் செய்யும் போதும் தம் குடிப்பிறப்புக்கு ஒவ்வாத இழிவான செயல்களைச் செய்யார்.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963
குடிப்பிறந்தார்க்குச் செல்வம் பெருகிய போது எல்லோரிடத்தும் பணிவு வேண்டும். செல்வம் மிகவும் குறைந்த போது பணியாமை வேண்டும்.
தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. 964
உயர்குடிப் பிறந்தவர், தம் குடிக்குரிய நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையைவிட்டு நீங்கிய மயிரைப் போல் இகழப் படுவர்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். 965
குடிப்பிறப்பால் மலை போன்ற உயர்ச்சியடையாரும், இழிசெயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் பெருமை குன்றுவர்.
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. 966
மானத்தை விட்டுத் தன்னை இகழ்வார் பின்னே ஒருவன் சென்று ஒன்றை வேண்டி நிற்கின்ற நிலையானது, புகழ் பயவாது. வானுலகத்தே அவன் பெயரைச் செலுத்தாது. இனி அது அவனுக்குச் செய்வது யாது?
ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. 967
பகைவர் பின் சென்று ஒருவன் வாழ்வதைக் காட்டிலும் முன்னின்ற நிலையிலேயே நின்று இறந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடுஅழிய வந்த இடத்து. 968
உயர்க்குடிக்குரிய
பெருமையானது தன் வலிமை அழிய வந்த விடத்து, இறத்தலைவிட்டு உடம்பைப் போற்றும் வாழ்க்கையானது பின்னும் இறவாமைக்கு மருந்தாகுமோ? ஒருபோதும் ஆகாது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 969
ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர், உயிர் நீக்கினால் மானம் வருமாயின் உயிரை விடுவர்.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970
தமக்குத் தாழ்வு வந்த போது உயிர் வாழாத மானமுடைய வரது புகழை, உலகினர் தொழுது வாழ்த்துவர்.
No comments:
Post a Comment