இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. 1051
வறியோர், இரத்தற்குத் தகுதியுடையாரைக் கண்டால் அவரிடம் இரக்கக்கடவர். இரந்தால் அவர் ஒளிப்பாராயின் அது அவரது பழியே இரப்பவர் பழியன்று.
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வாரின். 1052
இரந்த பொருள்கள் துன்படையாமல் வருமாயின், ஒருவனுக்கு இரப்பதும் இன்பமேயாகும்.
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. 1053
ஒளித்தல் இல்லாத நெஞ்சினையுடைய மான மறிவார் முன்னர் நின்று அவரிடம் ஒன்றை இரத்தலும், வறியோர்க்கு ஓர் அழகை உடையது. கேளாமல் கொடுத்தலால் கேட்டலான் வரும் சிறுமை இன்மையால் ஓர் ஏருடைத்து என்றார்.
இரத்தலும் ஈதலும் போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054
தமக்குள்ளதை இல்லையயன்பதைக் கனவிலும் அறியாத வரிடம் ஒன்றை இரத்தலும் கொடுப்பதனோடொக்கும்.
கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. 1055
ஒருவர்க்கு எதிரில் நின்று இரப்பவர் இரக்குந் தொழிலை மேற்கொள்வது, உள்ளதை ஒளிக்காமல் கொடுப்பவர் சிலர் வையகத்தில் உள்ளதனால் தான். மற்றொன்றால் அன்று.
கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். 1056
உள்ளதை ஒளித்தலாகிய நோயில்லாரைக் கண்டால், மறுமை யாகிய துன்பம் அனைத்தும் ஒரு சேரக் கெடும்.
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. 1057
தம்மை இகழ்ந்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால், இரப்போர் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே இன்பமுறுதலையுடைத்து.
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. 1058
வறுமையுற்று இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தை யுடைய பெரிய உலகத்திலுள்ளவர் செலவு வரவுகள், உயிரில்லாத மரப்பாவை கயிற்றினால் சென்று வந்து இயக்குதலை ஒக்கும்.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. 1059
இரந்து கொள்வதை விரும்பாதவர் இல்லாதவிடத்து, கொடுப்பவ ரிடத்துப் புகழ் எவ்வாறு உணடாகும்? உண்டாகாது.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை
தானேயும் சாலும் கரி. 1060
கொடுப்பவனுக்கு ஒருவேளை பொருள் இல்லை யயன்றால், இவன் எனக்கு ஈயவில்லை என்று இரப்பவன் வெகுளாதிருத்தல் வேண்டும்.
பொருளில்லாமை எல்லார்க்கும் நேரக்கூடும் என்பதை அறிதற்குத் தனது வறுமைத் துன்பம் ஒன்றே சான்றாதல் அமையும்.
பொருளில்லாமை எல்லார்க்கும் நேரக்கூடும் என்பதை அறிதற்குத் தனது வறுமைத் துன்பம் ஒன்றே சான்றாதல் அமையும்.
No comments:
Post a Comment