January 6, 2020

நடுவு நிலைமை


நடுவு நிலைமை

தகுதி எனஒன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.       111

நட்பு, பகை, நொதுமல் என்னும் பகுதி தோறும் ஒவ்வொருவர் பக்கமும் சார்ந்து நடக்க நேரிட்டால் நடுவு நிலைமை என்று கூறப்படும் ஒன்று நல்லதே.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.         112

நடுவு நிலைமை யுடையவன் செல்வம், கெடுதலின்றி அவன் வழி வருவோர்க்கும் பாதுகாவலை உடையது.

நன்றே தரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.   113

நன்மையே தரினும், நடுவு நிலைமை தவறுவதால் உண்டாகும் செல்வத்தை, அச்செல்வம் வரத் தொடங்கும் அப்போதே விட்டு விடுக.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.        114

இவர் நடுவுநிலைமை யுடையார், இவர் நடுவுநிலைமை இல்லார் என்பது, அவரவருடைய மக்கள் ஒழுக்கத்தைக் கொண்டு அறியப் படும்.

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.     115

கேடு உண்டாதலும் ஆக்கம் உண்டாதலும் உலகத்தில் இல்லாதவை அல்ல. கேடும் பெருக்கமும் உண்டாகும் காலங்களில், அவை காரணமாகத் தம்மனம் நடுவு நிலைமை திறம்பாதிருப்பது பேரறிஞர்களுக்கு அழகாகும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரீஇ அல்ல செயின்.    116

தன் மனம் நடுவுநிலையினின்றும் நீங்கி நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், ‘நான் கெடக்கடவேன்என்பதை அவன் அறிவானாக.

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.       117

நடுவு நிலைமையுடன் அறநெறியில் நின்றவன் கெடுவானாயின் அவன் கேட்டை, உலகத்தார் கேடாக எண்ணார்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.     118

தான் சமனாக இருந்து, தன் மீது வைக்கும் பொருளைச் சமனாக நிறுத்துக் காட்டும் துலாக்கோல் போல நடுநிலையுடையராயிருந்து ஒரு பக்கமாகச் சேராமையே அறிவுடையோர்க்கு அழகாகும்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.         119

மனத்தின்கண் கோணுதல் இல்லாமையைத் திண்மையாகப் பெறுவாராயின், பின்னர்ச் சொல்லின்கண் கோணுதல் இல்லாததே நடுவு நிலைமையாகும்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின்.     120

பிறர் பொருளையும் தமது பொருள் போல் எண்ணி வாணிகம் செய்தால், வாணிகம் செய்வார்க்கு நல்ல ஊதியமாகும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...