அவை அஞ்சாமை
வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். 721
சொற்களது தொகையை அறிந்த தூயவர், கற்று வல்ல அவை, வல்லா அவை என்னும் அவையின் வகையை அறிந்து, கற்று வல்லார் அவையில் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தால் பிழை படைச் சொல்லார்.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். 722
கற்றார் முன்னிலையில் தாம் கற்றவற்றை அவர் மனதில் கொள்ளுமாறு சொல்ல வல்லவர், கற்றவர்களில் இவர் நன்கு கற்றவர் என்று பெரியோரால் சொல்லப்படுவர்.
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர். 723
பகைவர்களிடம் அஞ்சாது புகுந்து இறப்பார் பலர். அவை யினிடம் அஞ்சாது புகுந்து சொல்லவல்லவர் சிலர்.
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். 724
கற்றவரவை முன்தாம் கற்றவற்றை அவர் மனங் கொள்ளுமாறு சொல்லி, தாம் கற்றவைகளிலும் மிகுதியானவைகளைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளக் கடவர்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. 725
அவையை அஞ்சாது மறுமொழி சொல்லுதற் பொருட்டு, முறையாகக் கற்க வேண்டிய நூல்களை அறிந்து நன்கு கற்க வேண்டும்.
வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு? 726
வீரம் இல்லாதாருக்கு வாளுடன் என்ன தொடர்பு இருக்கிறது? அது போல, நுண்ணறிவுடையோரது அவையை அஞ்சுபவர்க்கு நூலுடன் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை என்பதாம்.
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல். 727
அவை நடுவே நின்று அதனைக் கண்டு அஞ்சுபவன் கற்ற நூலானது, பகை நடுவே நின்று அதனைக் கண்டு அஞ்சும் பேடி, தன் கையில் பிடித்த கூரிய வாளைப் போலும்.
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். 728
நல்லாரவையில் நல்ல பொருள்களை அவர் மனங் கொள்ளும்படி சொல்ல மாட்டாதவர். பல நூல்களைக் கற்றறிந்தும் பயனில்லா தவரே ஆவர்.
கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.
729
கற்றறிந்திருந்தும்
நல்லோர் அவையை அஞ்சுவோரை, கல்லாத வரினும் கடை என்று சொல்லுவர் அறிவோர்.
உளர்எனினும் இல்லாரோடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். 730
அவைக் களத்தை அஞ்சித் தாங்கற்றவற்றை அவ்வவைக் கேற்பச் சொல்ல மாட்டாதவர், உயிருடன் இருப்பினும் இறந்தவரோடு ஒப்பர். மக்களுள் ஒருவராக மதிக்கப்படார் என்பதாம்.
No comments:
Post a Comment