கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல். 1071
வடிவால் முழுதும் மக்களைப் போன்றிருப்பர் கயவர், அவர் மக்களை ஒத்தாற் போன்ற ஒப்பு வேறு எவற்றினும் யாங் கண்டதில்லை.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன யய்தொழுக லான். 1072
கயவரைப் போன்றே தேவரும் தாம் விரும்புவனவற்றையே செய்து வருவதால், தேவரும் கயவரும் ஒரே தன்மையராவார்.
நன்றுஅறி வாரின் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 1073
தமக்கு நன்மையானவற்றை அறிவாரைக் காட்டிலும் அவை யறியாத கீழ்மக்கள் நல்லவராவார். ஏனெனில், அக் கீழ்மக்கள் தமது உள்ளத்தில் மேன்மக்களைப் போல் நன்மைகளை அறிய வேண்டும் என்கின்ற கவலை இல்லாதவராவர்.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074
தன்னைக் காட்டிலும் குறைந்த பட்டியாய் நடப்பாரைக் கண்டால், அவரைக் காட்டிலும் தான் உயர்ந்தவனென்று இறுமாப்புக் கொள்வான்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. 1075
கயவரிடம் ஒழுக்கங் காணப்படின் அதற்குக் காரணம் அரசனால் தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் அச்சமேயாகும். அஃதொழிந் தால், தம்மால் விரும்பப்படும் பொருள் அதனால் உண்டாகுமாயின் சிறிது ஒழுக்கம் உண்டாகும். அவ்வாறு நடந்தால் தாம் விரும்பிய பொருள் கிடைக்குமென்று தெரிந்தால் சிறிது அவ்வாறு ஒழுக்க முடையவராய் நடப்பர் என்பது கருத்து.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076
தாம் கேட்ட மறைபொருளைத் தாங்கிக் கொண்டு போய்ப் பிறர்க்குச் சொல்லுதலால், கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.
ஈர்ங்கை விதிரர் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. 1077
கீழ்மக்கள் தமது கன்னத்தை நொறுக்கும் வளைந்த கையை யுடைய கொடியோர் அல்லாதவர்க்க, தாம் உண்டு கழுவிய ஈரக்கையையும் உதறார்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். 1078
மேலோர், ஒருவன் தன் குறையைச் சொன்னவுடனே அவனுக்கு உதவி புரிவர். அவ்வாறின்றி, கீழ்மக்களோ தம்மைக் கரும்பைக் போல நையப் புடைத்தால் தான் பயன்படுவர்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ். 1079
பிறர் நன்கு உடுப்பதையும் உண்பதையும் கீழ்மகன் கண்டா னாயின், அவற்றைப் பொறாது, அவரிடத்தில் குற்றமில்லா விட்டாலும் குற்றமுண்டாக்க வல்லவனாவான்.
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. 1080
கயவர் தமக்கு ஏதேனும் ஒரு குறை உண்டான போது அது தீர்த்தற் பொருட்டு விரைந்து தம்மைப் பிறர்க்கு அடிமைப்படுத்தற் குரியர். அதுவன்றி வேறு எதற்குரியர்? ஒன்றுக்கும் உரியரல்லர்.
No comments:
Post a Comment