January 3, 2020

பசப்புறு பருவரல்


பசப்புறு பருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.         1181

என்னை விரும்பினவர்க்குப் பிரிவை உடம்பட்ட நான், அது பொறாது நிறம் மாறுபட்ட என்னியல்பினை யாருக்குச் சொல்வேன்!  
  
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன்
மேனிமேல் ஊரும் பசப்பு.        1182

இப்பசப்பு நிறம், என்னை உண்டாக்கினவர் அவர் என்னும் பெருமிதத்தினால், என் உடம்பின் மேல் ஏறி ஊருகின்றது.    

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.       1183

பிரிகின்ற போதே அவ்விரண்டற்கும் கைம்மாறாக இக்காம நோயினையும், பசலையையும் எனக்குத் தந்து, என் மேனி யழகினையும், நாணினையும் அவர் கொண்டு போயினார்.    

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.            1184

நான் எப்போதும் அவர் சொற்களையே நினைப்பேன். நான் சொல்லுவதும் அவர் நற்றிறங்களையே. அப்படியிருக்க எனக்குப் பசப்பு வந்தது கள்ளத்தனமாக இருக்கிறது.   

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்புஊர் வது.    1185

அன்றும் எங் காதலர் உங்கே செல்வாராக. என் மேனி பசப்பூர்வது இங்கே யன்றோ? அத்தகையது இன்று வேறொன்றாகுமோ?   

விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயற்குஅற்றம் பார்க்கும் பசப்பு.      1186

விளக்கினது மெலிவைப் பார்த்து நெருங்கி வரும் இருளே போல, தலைவனது முயக்கத்தின் மெலிவைப் பார்த்து நெருங்கிவரும் இப்பசலை.    

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.            1187

முன்னோரு நாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாமல் சற்று விலகினேன். அவ்வாறு புடை பெயர்ந்தேனோ இல்லையோ உடனே பசப்பு கையால் அள்ளிக் கொள்வது போல வந்து நிறைந்தது.    

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். 1188

இவள் ஆற்றியிராது பசலை நிறமடைந்தாள் என என்னைப் பழி கூறுவதல்லாமல், இவளை அவர் பிரிந்து போயினார் என்று அவரைச் சொல்வார் ஒருவருமில்லை.     

பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். 1189

என்னைப் பிரிவுக்கு உடம்படுத்தியவர் நல்ல நிலையினர் ஆவர் என்றால், என் உடம்பு எவ்வாறேனும் பசப்பதாக.  
  
பசப்பென பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.   1190

அன்று குறை நயப்பித்துக் கூடியவர் இன்று அருளாமையை நட்டார் தூற்றாராயின், பசலை நிறம் உற்றாள் என்னும் பெயரைப் பெறுதல் எனக்கு நல்லதே.    

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...