January 6, 2020

கள்ளாமை


கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.           281

பிறரால் இகழாமையை விரும்புவோனென்பான், யாதொரு பொருளையும் திருட நினையாதபடி தன் நெஞ்சைக் காக்கக் கடவன். திருடுவோனை உலகத்தார் இகழ்வார்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.            282

பிறனுடைய பொருளைத் திருடுவதற்குத் தன் நெஞ்சினால் நினைப்பதும் தீதாம். ஆதலால், அதை அவன் அறியாதபடி வஞ்சித்துக் கொள்ள முயலாதிருக்க.

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும். 283

களவினால் உண்டாகிய செல்வம், மேன்மேலும் வளர்வது போலத் தோன்றிப் பின் கெடும். திருட்டுப் பொருள் நிலையாது.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.     284

களவினிடத்து உண்டாகும் மிகுந்த விருப்பமானது, பயனளிக்கும் போது தொலையாத துன்பம் தரும்.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.      285

பிறர் பொருளைத் திருட நினைத்து அவரது மறதியை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்க்கு அருளை எண்ணி உயிர்களிடம் அன்புடையோராகும் குணம் உண்டாகாது.

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.        286

களவினிடத்து மிகுந்த ஆசையுடையவர், நேர்மையாய் நடந்து கொள்ள மாட்டார்.

களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.    287

நேர்மை என்னும் பெருமையை விரும்பினவரிடம், களவு என்னும் இருண்ட அறிவுடைமை இல்லை.

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல் நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.       288

நேர்மையை அறிந்தராது நெஞ்சத்தில் அறம் நிற்பதுபோல, களவு செய்ய அறிந்தவர் நெஞ்சில் வஞ்சனை நிற்கும்.

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.            289

களவல்லாத வேறொன்றையும் அறியாதவர், நேர்மை அல்லாத வற்றைச் செய்து அப்போதே கெடுவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.         290

திருடுவோர்க்கு உடம்பும் தவறிப்போகும். திருடாதார்க்கு தேவருலகமும் தவறாது.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...