January 6, 2020

மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல்


மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.          691

இகலும் அரசரைச் சேர்ந்து வாழ்பவர், அவரை மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் தீக்காய்வார் போல இருக்க வேண்டும்.   
   
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்.            692

மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல், அம் மன்னராலேயே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.  
  
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.   693

தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தம்மிடம் வராமல் காக்கக் கடவர். அரிய பிழைகள் செய்தனவாகக் கேட்டு அவ்வரசர்  ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் எவராலும் முடியாது. 
  
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.  694

சிறந்த அரசர் பக்கத்திலிருந்தால், அவர் காண ஒருவன் காதின்கண் சொல்லுதலையும், ஒருவன் முகம் நோக்கிச் சிரிப்பதையும் ஒழித்து நடக்க வேண்டும்.   

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.      695

அரசன் பிறரோடு மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கேளாமலும், அவனை விரைந்து  வினவாமலும், அப்பொருளை அவனே சொன்னால் மட்டும் கேட்கக் கடவர். 
   
குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.  696

அரசன் குறிப்பையறிந்து, ஏற்ற காலத்தையும் நோக்கி, வெறுப் பில்லாதவைகளும் விரும்பப்படுபவைகளுமாகிய செயல்களை அவன் விரும்புமாறு சொல்லக் கடவர்.

வேட்பன சொல்லி வினையல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.            697

அரசன் விருப்பப்படுவனவற்றைச் சொல்லி, எப்போதும் பயனில்லாதவற்றை அரசனே கேட்டாலும் சொல்லாது விட வேண்டும். வினை-பயன். 

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.       698

இவர் எம்மினும் இளையவரென்றும்,எமக்கின்ன முறையினை யுடையவரென்றும் அரசரை இகழாமல், நிலைபெற்ற தலைமை யோடு பொருந்த நடந்து கொள்ள வேண்டும். 

கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குஅற்ற காட்சி யவர்.      699

அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டோம் என்று நினைத்து அவன் விரும்பாதவைகளைச் செய்யா மாட்டார், அசைவற்ற அறிவினை யுடையவர்.

பழையம் எனக்கருதி பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.    700

அரசனுக்கு யாம் பழைய நண்பர் என்று எண்ணி, தமக்கு இயல்பில்லாதவை செய்யும் உரிமையானது, கெடுதியைத் தரும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...