நெஞ்சொடு கிளத்தல்
நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241
நெஞ்சமே! தீராத இக்காம நோயைத் தீர்க்கும் ஒரு மருந்தை, யானறியும்படி, எப்படியாவது அறிந்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?
காதல் அவர்இல ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு. 1242
என் நெஞ்சே! வாழ்வாயாக! அவர் நம்மிடம் காதல் இல்லாதவரா யிருக்க, அவர் வரவு நோக்கி நீ வருந்துவது அறியாமையே.
இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துஉள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். 1243
நெஞ்சே! இங்கு இருந்து நினைத்து வருந்துவது எதற்கு? இத்துன்ப நோயை உண்டாக்கியவரிடம் நமக்காக இறங்கி நம்மிடம் வரும் நினைப்பு இல்லை.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. 1244
நெஞ்சே! நீ அவர்பால் செல்லும் போது இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக. இக்கண்கள் அவரைக் காண விரும்பி நீ காட்டென்று என்னைத் தின்பன போல வருந்துகின்றன. தான் சேறல் வேண்டுமென்பது கருத்து.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். 1245
நெஞ்சமே! நாம் விரும்பினால், நாம் தம்மை விரும்பாத நம் காதலரை, நம்மை வெறுத்தாரென்று கைவிடும் ஆற்றல் நமக்குண்டோ? இல்லை. இதுவுமது அவர்பால் செல்வதே நமக்குத் தகுதி என்பதாம்.
கலந்துஉணர்த்தும்
காதலர்க் கண்டால் புலந்துஉணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. 1246
என் நெஞ்சமே! நாம் அவரோடு புலந்தால் அவ்புலவியைக் கலவியால் நீக்க வல்ல காதலரைக் கண்டால் பொய்யாக வேனும் ஒருமுறை புலந்து பின்னதனை நீங்க மாட்டாய். அதுவும் மாட்டாத நீ இப்பொழுது அவர் கொடியரென அவர் மீது பொய்க்காய்வு காய்கின்றாய். இதில் பயனில்லை யாதலால் அவரிடம் செல்லத் துணிவாயாக.
காமம் விடுஒன்றோ நாண்விடு நல்நெஞ்சே
யானே பொறேன்இவ் விரண்டு. 1247
நல்ல நெஞ்சே!
ஒன்று காமத்தை விடு அல்லது நாணத்தை விடு. ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டையும் நான் பொறுக்க மாட்டேன். நாண் தடுத்தலின் அச்செலவொழிவாள் சொல்லியது.
பரிந்தவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248
என் நெஞ்சே! அவர் வருத்தமுற்று வந்து அருள் செய்யார் என்று நினைத்து, நம்மை பிரிந்து போன அவர் பின்னால் ஏங்கிச் செல்கின்றாய். நீ யாதுமறியாய். இதுவுமது.
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு. 1249
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளேயிருக்க, நீ வெளியில் தேடிச் செல்வது
யாரிடத்து?
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். 1250
நம்மைச் சேராது நீங்கினவரை உள்ளத்தில் உடையே மாயின், முன்னிழந்ததே யல்லாமல் இன்னும் நமது அழகை இழப்போம்.
No comments:
Post a Comment