January 6, 2020

அமைச்சு


அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.          631

செய்யப்படும் அரிய செயலும், அதற்குரிய கருவியும், காலமும் அச்செயலைச் செய்யுமாறும் பொருந்த எண்ணியறிய வல்லவனே அமைச்சனாவான். 
  
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.          632

அஞ்சாமையும் குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்ற றிதலும், முயற்சியும் ஆகிய நான்கும், ஐம்பொறிகளின் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்சனாவான்.     

பிரித்தலும் போணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.   633

பகைவர்க்குத் துணையாயினோரை அவரினின்றும் பிரித்தலும், தம்மவரைத் தம்மைவிட்டுப் பிரிந்து போகாமல் காத்துக் கொள் ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தவர்களை மீண்டும் தம்மோடு சேர்த்தலும், வல்லவனே அமைச்சனாவான்.    

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.     634

ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்து செய்தலும், ஐயுறாமல் துணிந்து சொல்லுதலும் வல்லவனே அமைச்சனாவான்.

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ்  ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.            635

அறங்களை அறிந்து, அறிவால் நிறைந்து அமைந்த சொல்லை யுடையவனாய், எப்போதும் வினை செய்யுந் திறங்களை அறிந்தவனே மன்னனுக்குச் சூழ்ச்சித் துணையாவான்.    

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.            636

நுண்ணறிவை நூலறிவுடன் உடையவராகிய அமைச்சருக்கு, மிக்க நுட்பமானவைகளாய் முன்னிற்பவை எவையுள்ளன? ஒன்றுமில்லை.     

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.      637

நூல் வழியாகத் தொழில் செய்யும் முறைகளை அறிந்த விடத்தும், அப்போது நடைபெறும் உலக நடையை அறிந்து அதற்கப் பொருந்தச் செய்ய வேண்டும். 
   
அறகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.        638

அறிந்து சொல்வோரது அறிவையும் ஏற்காமல் தானும் அறியானா யினும், அம்மன்னவனுக்கு உறுதிமொழிகளைக் கூறுவது அமைச்சனது கடமை யாகும்.   
 
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்
எழுபது கோடி உறும்.     639

பக்கத்திலிருந்து தீங்கு நினைக்கும் அமைச்சனொருவனுக்கு, எழுபது கோடி பகைவர் ஒப்பாவார்.    

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.           640

வினை செய்யுந் திறமை இல்லாதவர், முன்னரே அடைவுபட எண்ணியிருந்தும் அவை செய்யுங்கால் முடிவிலவாகவே செய்வார்.    

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...