உட்பகை
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். 881
நிழலும் நீரும் இனியனவாய்க் காணப்படினும் அவற்றுள் நோய்களைத் தருபவை இனியவை அல்ல. அது போல, சுற்றத்தார் இயல்பு களும் இனிமை தருவன போல் காணப்படினும் அவர்கள் துன்பம் செய்தால் இனியவை அல்லவாம்.
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. 882
வெளிப்படையாக வெட்டும் வாளைப் போல வெளிப்படையான பகைவரது பகையைக் கண்டு அஞ்சற்க. உறவினரைப் போல மறைவாக நிற்கும் பகைவரது நட்பைக் கண்டு அஞ்சுக.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். 883
உட்பகையானவர்களைக்
கண்டு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க. ஏனெனில், தனக்கோர் தளர்ச்சி வந்த போது குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல அவர்கள் தப்பாமல் கெடுப்பர்.
மனம்மானா உட்பகை தோன்றின் இனம்மானா
ஏதம் பலவும் தரும். 884
புறந்திருந்தியது
போல அகந்திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாயின், அது அவன் சுற்றத்தார் நல்லவராகாத குற்றம் பலவும் தரும்.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். 885
வெளிக்கு உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின், அது அவனுக்கு இறத்தல் முறை யோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. 886
உட்பகை தனக்கு உட்பட்டவரிடத்தே தோன்றுமாயின், அவன் இறவாமையுடன் கூடுதல் எப்போதும் அரிதாகும்.
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. 887
சிமிழினது புணர்ச்சி போலப் புறத்தே வேற்றுமை தெரியாது கூடினாராயினும், உட்பகை உற்ற குடியில் உள்ளவர்கள் அகத்தே தம்முள் கூட மாட்டார்.
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. 888
உட்பகை உண்டாகிய குடியானது, அரத்தால் அரவாப் பட்ட இரும்பு போல அவ்வுட்பகையால் அரவாப்பட்டு வலி குறையும்.
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு. 889
ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவைப் போல அவ்வளவு சிறியதாயினும், அப்பெருமை முழுவதும் போக்கும் கேடு அதில் உள்ளதாகும்.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று. 890
No comments:
Post a Comment