January 6, 2020

பயனில சொல்லாமை


பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.        191

பலர் வெறுக்கும்படி பயினில்லாதவற்றைச் சொல்லுபவன், எல்லோராலும் இகழப்படுவான்.

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது. 192

பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லா தவற்றைத் தன் நண்பரிடத்துச் செய்தலினும் தீதாகும்.

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை.       193

பயன் இல்லாதவற்றை விரித்துப் பேசும் பேச்சே, இவன் நன்மை இல்லாதவன் என்பதை அறிவித்துவிடும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.      194

பலர் கூடிய கூட்டத்துள் கூறும் பயனுடன் கூடாத பண்பற்ற சொற்கள், அறத்தோடு பொருந்தாதவையாகி அவன் நன்மை யினின்றும் நீக்கும். 

சீர்மை சிறப்போடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.   195

பயனற்ற சொற்களைப் பெருந்தன்மை யுடையார் சொன்னால், சீர்மையும் சிறப்பும் நீங்கிவிடும்.

பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.         196

பயனற்ற சொற்களை மேன்மேலும் பேசுபவனை, மகன் என்று சொல்லற்க. மக்களில் பதர் என்று சொல்லுக.

நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று.       197

சான்றோர் அறமல்லாதவற்றைச் சொல்லினும் சொல்லக் கடவர், பயனற்ற சொற்களைச் சொல்லாமலிருத்தல் நல்லது.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.           198

அரிய ஆராயும் அறிவினையுடையார், மிகுந்த பயன ளிக்காத சொற்களைச் சொல்லார். அரும்பயன்-உண்மையும் நன்மையும். 

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.       199

மயக்கந் தீர்ந்த குற்றமற்ற அறிவினையுடையோர், பயனற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.       200

சொற்களில் பயனுடையவற்றைச் சொல்லுக. சொற்களில் பயனில்லாத சொற்களைச் சொல்லாதொழிக.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...