ஒழுக்கம் உடைமை
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரைக் காட்டிலும் பாதுகாக்கப்படும்.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. 132
வருந்திப் போற்றி ஒழுக்கத்தைக் காக்க வேண்டும். அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து போற்றி முடிவு காணினும் அவ்வொழுக்கமே ஒருவனுக்கு உற்ற துணையாகும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133
நல்லொழுக்கம் உடைமையே உயர்குடித் தன்மையாகும். ஒழுக்க மின்மை தாழ்குடித் தன்மையாகி விடும்.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். 134
நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் அவற்றை மறப்பினும் மறுபடியும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், மக்கட் பிறப்புக்குரிய உயரிய ஒழுக்கம் குறையுமானால் அவன் கெடுவான்.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. 135
பொறாமை உடையவனிடத்துச் செல்வம் இல்லாமை போல, ஒழுக்கம் இல்லாதவனிடத்து உயர்ச்சி இல்லை.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 136
ஒழுக்கந் தவறுதலால் குற்றம் உண்டாதலை அறிந்து, மனவலிமை யுடையோர் நல்லொழுக்கத்தினின்றும் சுருங்கார்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137
நல்லொழுக்கத்தினால்
மேன்மை அடைவர். தீய ஒழுக்கத்தால் அடாத பழியை அடைவர்.
நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுக்கம் தீயயாழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138
நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாகும். தீய ஒழுக்கம் எப்போதும் துன்பந்தரும்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாதே தீய
வழுக்கியும் வாயால் சொலல். 139
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லுதல், நல் லொழுக்கமுடையவர்க்கு முடியாது.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140
பல நூல்களைக் கற்றிருந்தும் உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர், அறிவில்லாதவர் ஆவர்.
No comments:
Post a Comment