January 6, 2020

குடி செயல்வகை


குடி செயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.        1021

தன் குடியை உயர்த்தும் பொருட்டு தான் மேற்கொண்ட காரியத்தை முடிக்காமல் விடேன் என்னும் முயற்சியாகிய பெருமையைப் போல, ஒருவனுக்குப் பெருமையுடையது வேறு இல்லை.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.   1022

முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினது இடையறாத செயலால், ஒருவனது குடி உயரும்.

குடிசெய்வால் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.    1023

எனது குடியை நான் உயரச் செய்வேன் என்று அதற்கேற்ற செயல்களில் முயலும் ஒருவனுக்கு, ஊழ் ஆடையை இறுக உடுத்துக் கொண்டு தான் முன் வந்து நிற்கும்.

சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.      1024

தம் குடி உயர்தற்குரிய செயல்களை விரைந்து முயல்வார்க்கு, அச் செயலை முடிக்கும் திறத்தை அவர் ஆராயாமல் இருக்கும் பொழுதே அது தானாகவே முடிவடையும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.         1025

குற்றமற்றவனாய்த் தன் குடியை உயரச் செய்து வாழ்பவனை, உலகத்தார் நமக்குச் சுற்றமாக விரும்பித் தாமே போய்ச் சுற்றி நிற்பர்.

எல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.     1026

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது எது வெனில், தான் பிறந்த குடியை ஆளுந்தன்மையைத் தானே உண்டாக்கிக் கொள்ளுதல்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. 1027

போர்க்களத்தில் உள்ள வீரர் பலருள்ளும் போரைத் தாங்குதல் வலியாரிடமே உள்ளது போல, குடிப்பிறந்தார் பலருள்ளும் அக்குடியின் சுமையைத் தாங்குதல் வல்லவரிடமே உள்ளது.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.  1028

தங்குடியினை உயரச் செய்வார் அச் செயலையே நோக்காது காலத்தை நோக்கி, சோம்பலை மேற்கொண்டு மானத்தையும் நோக்குவராயின் குடி கெட்டுவிடும். ஆகையால், தங்குடியை உயரச் செய்பவர்க்குக் காலவரையறை இல்லை. 

இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பா னுடம்பு.      1029

தன் குடும்பத்திற்குத் துன்பமுண்டாகாமல் காக்க முயல்பவனது உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாமோ அன்றி, இன்பத்திற்குக் கொள்கலம் ஆதலில்லையோ?

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும்
நல்லாள் இலாத குடி.    1030

தன் குடி சாயும்போது அதை விழாமல் தாங்கி உதவி புரியும் நல்ல ஆண்மகன் இல்லாத குடியாகிய மரம், துன்பமாகிய கோடரி வேரை வெட்டிச் சாய்க்க விழுந்து விடும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...