குடிமை
இற்பிறந்தார் கண்ணல்ல இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. 951
நற்குடிப் பிறந்தாரிடத்தல்லது பிறரிடத்தில், செம்மையும் நாணமும் ஒருங்கே இயல்பாக உண்டாகா.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்
இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். 952
உயர்குடியில் பிறந்தவர்கள், ஒழுக்கம், உண்மை, நாணம் என்ற இம்மூன்றிலும் தவறாது நடப்பார்கள்.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. 953
எக்காலத்தும் ஒழுக்கந் தவறாத குடிப்பிறந்தார்க்கு, வறியார் சென்றால் முக மலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன் சொற் சொல்லுதலும், இகழாமையுமாகிய இந் நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் அறிவு டையோர்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். 954
பலவாக அடுக்கப் பெற்ற கோடி பொருளைப் பெற்றாலும்,
உயர்குடிப் பிறந்தவர் தமது ஒழுக்கம் குன்றும் செயல்களைச் செய்யார்.
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று. 955
தொன்று தொட்டு வரும் குடியில் பிறந்தவர், தாம் கொடுக்கும் பொருள் முன்பு இருந்ததைக் காட்டிலும் குறைந்தவிடத்தும், தமது இயல்பினின்றும் நீங்க மாட்டார்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மாசு அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். 956
குற்றமற்ற தம் குடிக்கேற்ப வாழ்கின்றோம் என்று எண்ணுபவர், வறுமையுற்ற போதும், வஞ்சனையாகத் தங்குடிக்கு ஏலாத செயல்களைச் செய்யார்.
குடிப்பிறந்தார் கண்விங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957
உயர்குடிப் பிறந்தவர்களிடம் காணப்படும் குற்றம் சிறியதா யினும், வானத்தில் மதியிடத்துள்ள மறுவைப் போல உயர்ந்து காணப்படும்.
நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். 958
நல்ல குலத்தில் பிறந்தவனிடம் அன்பின்மை காணப் பட்டால் அவனை அக்குடிப் பிறப்பில் தப்பினவனென்று ஐயப்படும் உலகம்.
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். 959
நிலத்தின் இயல்பை அந்நிலத்தில் முளைத்த முளை காட்டும். அது போல உயர்குடியில் பிறந்தவர் இயல்பை அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் காட்டிவிடும்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டும் யார்க்கும் பணிவு. 960
ஒருவன் தனக்கு நலத்தை விரும்புவானாயின் நாணு டைமையை விரும்பக் கடவன். உயர் குடித்தன்மையை விரும்புவானாயின் எல்லோரிடத்தும் பணிதலை விரும்பக் கடவன்.
No comments:
Post a Comment