January 6, 2020

அடக்கம் உடைமை


அடக்கம் உடைமை

அடக்கம் அமர்அருள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்.        121

அடக்கம் மிக்க மேன்மையைக் கொடுக்கும். அடக்கமின்மை மிக்க துன்பத்தைக் கொடுத்துவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.            122

ஒருவன் அடக்கத்தைச் சிறந்த பொருளாக எண்ணிக் காக்கக் கடவன். உயிர்கட்கு அவ்வடக்கத்தைவிட மேலான செல்வம் வேறில்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.     123

அடக்கமாக வாழ்தலே அறிவு என்பதை அறிந்து நல்வழியினால் ஒருவன் அடங்கப் பெற்றால், அவனுடைய அடக்கத்தை உலகம் அறிந்து அவனுக்கு மேன்மை அளிக்கும்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.            124

ஒழுக்க நிலையில் நின்றும் மாறுபடாது அடங்கினவனுடைய உயர்ச்சி, மலையைவிட மிகப்பெரியது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.    125

அடங்குதல் பொதுவாக உலக மக்கள் யாவர்க்கும் நல்லதாகும். யாவரினும் செல்வமுடையவர்க்கே அவ்வடக்கம் பிறிதொரு செல்வ மாகும் சிறப்பினையுடையது.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.         126

ஒரு கூட்டிற்குள் ஐந்துறுப்பினையும் அடக்கும் ஆமையைப் போல, ஐம்பொறிகளும் ஐம்புலன்கள் மேலும் விரும்பியவாறு செல்லாமல் அடக்க வல்லவனாகில், அச்செயல், பல தீமைகளும் அணுகாத பாதுகாப்பாக உடையது.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.   127

பிற பொறிகளைக் காவாராயினும் நாவை மட்டும் காக்கக் கடவர், நாவைக் காவாராயின் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும்.           128

ஒருவன் சொல்லும் சொற்களில் ஒன்றாயினும் தீய சொல்லினது பொருளின் பயனைத் தருமாயின், அது தீதாகிவிடும்.

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.   129

தீயினால் சுட்ட புண் உடலின்கண் ஆறாதிருக்கினும் மனத்தின் கண் ஆறிவிடும். நாவினால் சுட்ட தழும்பு எப்போதும் மனத்தின்கண் ஆறாது.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.            130

சினத்தைக் காத்து, கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கத்தைக் கைக்கொள்ள வல்லவனது காலத்தை, அவனை யடையும் வழியில் சென்று அறம் பார்க்கும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...