இறைநலம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
எழுத்துக்களெல்லாம்
அகரத்தை முதலாக உடையன. அது போல, உலகம் ஆதிபகவனை முதலாக உடையது. ஆதி பகவன்- முதன்மையானவன்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
உண்மையறிவினை உடையவனது நல்ல தாள்களைத் தொழா ராயின், ஒருவர்க்குக் கற்றதனால் உண்டாகிய பயன் ஒன்றுமில்லை.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
உயர்ந்த அறிவினை உடையவனது மாட்சிமைப்பட்ட அடி களைச் சேர்ந்தவர், உலகத்தில் நிலைபெற்று நீடு வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பற்றவனது அடிகளைச் சேர்ந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
இறைவனது (முதல்வன், தலைவனது) மெய்ப்பொருள் சேர்ந்த புகழை விரும்பினவரிடத்து அறிவின்மையால் உண்டாகும் பெரிய துன்பங்கள் சேரா.
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
ஐம்பொறி வழியே செல்லும் ஐம்புலன்களையும் அடக்கினவனது உண்மையான ஒழுக்க நெறியில் நின்றவர், உலகில் நிலை பெற்று வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
ஒப்பில்லாதவனது தாளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், மற்றையோர்க்கு மனக் கவலையை நீக்க முடியாது.
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது. 8
அறக்கடலாகிய அந்தணனது தாளாகிய புணையைச் (தெப்பம்) சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு பிற கடல்களைக் கடக்க முடியாது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
எளிமையாகிய குணம் உடையவனது தாளை வணங்காத தலைகள், புலன்களைக் கொள்ளுதலில்லாத பொறிகள் போலப் பயனில்லாதனவே யாகும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
இறைவனது (தலைவனது) அடியாகிய புணையைச் சேராதவர், இப்பிறவியாகிய பெரிய கடலை எளிதில் கடக்க வல்லராய் இருக்கினும் கடவார்.
No comments:
Post a Comment