இகல்
இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்புஇல்லாமை பாரிக்கும் நோய். 851
எல்லாவுயிர்கட்கும்
பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் நோயை, இகல் என்று சொல்லுவர் அறிவுடையோர்.
பகல்கருதிப் பற்றா செயனும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. 852
தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தாலும், அவனோடு மாறுபாட்டைக் கருதி அவனுக்குத் துன்பஞ் செய்யாமல் இருப்பது சிறந்தது.
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும். 853
மாறுபாடு என்னும் துன்பந் தருகின்ற நோயை ஒருவன் தன் மனத்திலிருந்து நீக்குவானாயின், அவனுக்கு அந்நீக்கம் எப்போதும் அழிவில்லாத குற்றமற்ற புகழைத் தரும்.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். 854
மாறுபாடு என்னும் துன்பங்களுக்கெல்லாம் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின், அது அவனுக்கு இன்பங்களிலெல்லாம் மிக்க இன்பத்தைக் கொடுக்கும்.
இகல்எதிர் சாய்ந்தொழுக எல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர். 855
மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாமல் நடக்க வல்லாரை, வெல்லக் கருதும் தன்மையுடையவர் யார்? ஒருவருமில்லை.
இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. 856
பிறரோடு மாறுபடுதலில் மிகுதல் எனக்கு இனிது என்பவனுடைய வாழ்க்கையானது, வறுமையால் துன்பமடைதலும் முழுதும் கெடுதலும் விரைவில் உண்டாகும்.
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்
இகல்மேவல்
இன்னா அறிவி னவர். 857
மாறுபாடு பொருந்துதலையுடைய இன்னாத அறிவினை யுடையவர், வெற்றி பொருந்துதலையுடைய உண்மைப் பொருளை அறிய மாட்டார்.
இகலிறகு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின ஊக்குமாம் கேடு. 858
மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாமை ஒருவனுக்கு ஆக்கமாகும். மாறுபாட்டில் மிகுதலை மேற்கொள்ளின் கேடு மிகும்.
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. 859
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது மாறுபாட்டை நினையான், தனக்குக் கேடு செய்து கொள்ளும் போது அதை மிகுதியாக நினைப்பான்.
இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம்
நன்னயம் என்னும் செருக்கு. 860
மாறுபாட்டினால் இன்னாதனவெல்லாம் உண்டாகும். நட்பால் நல்லறம் என்னும் பெருஞ் செல்வம் உண்டாகும்.
No comments:
Post a Comment