January 3, 2020

கனவுநிலை உரைத்தல்


கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.     1211

என் காதலர் அனுப்பிய தூதினைக் கொண்டு என்னிடம் வந்த கனவுக்கு, யான் எவ்வகை விருந்து செய்வேன்!     

கயலுண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.       1212

கெண்டை மீன் போன்ற மையுண்ட கண்கள் யான் வேண்டுவதற்கு இணங்கித் தூங்குமாயின், கனவில் வருங் காதலருக்கு யான் பொறுத் திருக்கும் தன்மையை எடுத்துரைப்பேன்.     

நனவினான் நல்கா தவரைக் கனவினான்
காண்டலின் உண்டுஎன் உயிர்.          1213

நனவில் வந்து முழு அன்பு செய்யாதாரை, யான் கனவின்கண் கண்ட காட்சியினால் என் உயிர் இருக்கின்றது.    

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.          1214

நனவில் வந்து அருள் செய்தாரை அவர் சென்ற இடத்தில் தேடிக் கொண்டு வந்து கனவு தருதலான், அக் கனவினிடத்து எனக்கு இன்பம் உண்டாகிறது.
 
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்டபொழுதே இனிது.           1215

முன் நனைவில் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்போது இனிதாயிற்று. கனவில் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்ட பொழுதே இனிதாயிற்று. ஆகவே, எனக்கு இரண்டும் ஒன்றே. 

நனவுஎன ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.   1216

நனவு என்று சொல்லப்படுகிற ஒரு கொடியோன் இல்லையாயின், கனவில் என்னை வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.   

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்எம்மைப் பீழிப் பது.            1217

நனவில் வந்து ஒரு நாளும் அருள் செய்யாத கொடியவர், நாடோறும் கனவில் வந்து நம்மை வருந்துவது எது பற்றியோ? 

துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து.    1218

என் உள்ளத்தில் உறையுங் காதலர் யான் தூங்கும் பொழுது என் தோள் மேல் இருப்பவராகி, யான் விழிக்கும் போது விரைந்து வந்து என்  நெஞ்சில் இருப்பர்.
  
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர். 1219

கனவில் தம் காதலரைக் காணாத மகளிர், நனவில் வந்து  அருளாத காதலரை நோவர். கனவிலே காண்பாரியின் நோவார். 

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.   1220

இவ்வூரிலுள்ளார் நனவில் நம்மை விட்டுப் பிரிந்தாரென நம் காதலரைக் கொடுமை கூறுவர். அவர்கள் கனவில் நுங்காதலர் நீங்காது வருதலைக் காணார் போலும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...