January 6, 2020

அவா அறுத்தல்


அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.            361

எல்லா உயிர்கட்கும் எப்போதும் கெடாத துன்பத்தை விளைவிக்கும் விதையை, அவா என்று சொல்லுவர் பெரியோர்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.           362

ஒருவன் வேண்டும் போது துன்பமில்லாமையை வேண்டுவான். அத்துன்பமில்லாமை அவாவமின்மையை விரும்ப வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்.      363

அவாவின்மையைப் போன்ற சிறந்த செல்வம், இவ் வுலகத்தில் இல்லை. வேறெங்கும் அதை போல்வது இல்லை.

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.   364

தூய்மை என்று சொல்வது அவாவில்லாமை. அவ்வாவின்மை யானது உண்மையை விரும்ப வரும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். 365

பற்றற்றவர் என்பார் ஆசையை நீக்கினவர்களே. ஆசையை நீக்காதவர் அவ்வாறாகப் பற்றற்றவர் இல்லை. 

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.         366

ஒருவனை வஞ்சிப்பது அவா. ஆதலால் அவ்வவாவை அஞ்சிக் காப்பதே அறமாகும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.     367

அவாவை முழுதும் நீக்கினால், கெடாத நற்செயல்தான் விரும்பு கின்றபடியுண்டாகும்.  

ஒருவன் அவாவினை முற்றிலும் நீக்கக்கூடிய வல்லமையைப் பெற்றிருப்பானேயானால், அவன் எவ்வகையிலும் கெடாமைக்கு ஏதுவான நற்செயல், அவன் விரும்புகின்ற வழியில் தானே வந்து நிற்கும்.

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்  அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.   368

ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லையாகும். ஆசையுண்டாயின் முடிவில்லாமல் மேலும் மேலும் வரும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.   369

அவா என்னும் துன்பங்களுள் மிக்க துன்பமானது கெடுமாயின், இன்பம் இடைவிடாது வந்து சேரும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.   370

நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் நீக்குவானாயின், அப்போதே அவனுக்கு அது அசையாத தன்மையைக் கொடுக்கும். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...