புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 181
ஒருவன் அறம் என்று கூறுவதும் இல்லானாய் அறமல்லாத வற்றைச் செய்தாலும், ஒருவனை காணாதவிடத்தில் இகழ்ந்து பேசான் என்று உலகோரால் சொல்லப்படுதல் நல்லது.
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. 182
ஒருவனைக் காணாதவிடத்து இகழ்ந்து பேசிக், கண்டவிடத்துப் புகழ்ந்து பேசுதல், அறத்தைக் கெடுத்து அறமல்லாதவற்றைச் செய்தலினும் தீதாகும்.
புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். 183
ஒருவனைக் காணாவிடத்து இகழ்ந்து கூறிக் கண்டவிடத்துப் புகழ்ந்து கூறி உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாமல் இறத்தல் அறநூற்கள் சொல்லுகின்ற எல்லாப் பெருமையும் தரும்.
கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்கச் சொல். 184
ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமில்லாமல் கடுஞ்சொற் களைச் சொன்னாலும், ஒருவனைக் காணாதவிடத்து பின்பு அவனைப் பார்க்க முடியாத பழிச் சொற்களைச் சொல்லற்க.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும். 185
ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனத்தையுடையவன் அல்லாமை, அவன் புறங்கூறும் புல்லிய குணத்தினால் அறியப்படும்.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். 186
பிறனுடைய பழிகளை அவனைக் காணாதவிடத்துக் கூறுபவனு டைய பல பழிகளுள்ளும், அவன் வருந்துதற்குரிய கொடும் பழிகளை ஆராய்ந்தறிந்து அப்பிறனால் கூறப்படும்.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 187
கூடி மகிழுமாறு இன்சொல் சொல்லி அயலாரோடும் நட்புச் செய்தலை நன்மை என்று அறியாதவர், தம்மை விட்டு நீங்கும்படி புறங்கூறி உறவினரையும் பிரிப்பர்.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 188
உறவினர் குற்றத்தையும் கணாதவிடத்துத் தூற்றும் இயல்பினர், பகைவரிடத்துச் செய்வது யாதோ?
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. 189
பிறர் இல்லாதவிடம் பார்த்துப் புறங்கூறுவான் உடற் சுமையை, இவ்வுலகம் ‘இக் கொடுமையைச் சுமத்தலே எனக்கு அறம்’ என்று நினைத்துச் சுமக்கிறது போலும்!
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. 190
அயலாரது குற்றத்தைப் போலத் தம் குற்றத்தையும் காண வல்லராயின், நிலை பெற்ற உயிர்க்குத் தீமை உண்டோ? இல்லை.
No comments:
Post a Comment