குறிப்பு அறிதல்
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து. 1091
இவள் மையுண்ட கண்களில் உள்ளதாகிய
பார்வை இப்போது என் மீது இரண்டு பார்வை ஆயிற்று. அவற்றில் ஒரு பார்வை எனக்கு நோய் தரும் பார்வை. மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகிய பார்வை.
கண்அளவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது. 1092
இவள் கண்கள் யான் காணாமல் என்னைக் கள்ளத்தனமாய்ப் பார்க்கும் சிறிய பார்வையானது, மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதி யன்று. அதைவிடப் பெரிது.
நோக்கினாள் நோக்க இறைஞ்சினாள் அஃதுஅவள்
யாப்பினுள் அட்டிய நீர். 1093
நான் பார்க்காத போது என்னை அன்போடு பார்த்தாள். பார்த்து ஒன்றனை உட்கொண்டு அதனால் வெட்கித் தலைகுனிந்தாள். அக்குறிப்பு எங்கள் இருவரிடத்தும் தோன்றிய அன்பாகிய பயிர் வளர அப்பயிரில் அவள் ஊற்றிய நீரானது.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். 1094
நான் அவளைப் பார்க்கும் போது அவள் என்னைப் பாராது தலை குனிந்து நிலத்தைப் பார்ப்பாள். அதையறிந்து, நான் அவளைப் பாராவிடின் அவள் என்னைப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்வாள். இம்மகிழ்ச்சி யால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும்.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் . 1095
நேராக என்னைக் குறித்து பாராததேயல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினாற் போலப் பார்த்து மகிழ்வாள்.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். 1096
அயலார்போல் கடுஞ்சொல் சொன்னாராயினும், பகைமைக் குணமில்லாதவர் சொல் பயன்தரத் தக்கது என்பதை விரைவில் அறியப்படும்.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 1097
பின் இன்பந்தரும், முதலில் இன்பந்தராத கடுஞ்சொல்லும், வெளிக்குப் பகைவர் போன்ற வெகுளிப் பார்வையும், நொது மலர் போன்று அன்பராயினாரது குறிப்பாகும். உள்ளொன்று குறியாமை யால் இவற்றிற்கு அஞ்ச வேண்டாமென்பதாகும்.
அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். 1098
நான் வருந்தி நோக்கிய போது அதற்கிரங்கி மெல்ல மகிழா நின்றாள். ஆகையால் அசையும் இயல்பினை யுடையவளுக்கு அந்நகையில் ஓர் நன்மைக் குறிப்பு உண்டு.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. 1099
முன் அறியாதார் போல ஒருவரை ஒருவர் பொதுப் பார்வை பார்த்தல், காதலரிடமே உள்ளன.
கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. 1100
காதலர் இருவருள், ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் பார்வையில் ஒத்திருக்குமாயின், அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் ஒரு பயனும் உடையவை யல்ல.
No comments:
Post a Comment