நினைத்தவர் புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. 1201
முன்னைய இன்பத்தினைப் பிரிந்த போது நினைத்தாலும் நீங்காத மிகுந்த களிப்பைத் தருதலால்,
உண்ட போதல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளைப் பார்க்கிலும் காமம் இனியது.
எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதுஒன்று இல். 1202
தம்மால் விரும்பப்படுவோரைப் பிரிவின் கண் நினைத்தால் அந்நினைப்பார்க்கு அப்பிரிவால் வருவதோர் துன்பம் இல்லை. ஆதலால், காமம் எவ்வகையிலும் இனிதொன்றேயாகும்.
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். 1203
எனக்குத் தும்மல் உண்டாவது போன்று தோன்றி உடனே அடங்கி விடுகிறது. ஆதலால், அவர் நம்மை நினைப்பவர் போலக் காட்டி உண்மையில் நினையாராதல் வேண்டும்.
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். 1204
எம்முடைய நெஞ்சில் அவர் எப்போதும் உள்ளவராயிருக் கின்றார். அவ்வாறே அவருடைய நெஞ்சிலும் யாமும் உள்ளேம் ஆகின்றேமோ? அல்லது இல்லேமோ?
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். 1205
தம்முடைய நெஞ்சில் யாம் சேராமல் காவல் கொண்ட தலைவர். எமது நெஞ்சில் இடைவிடாது வந்து நிற்பதற்கு நாண மாட்டாரோ?
மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரோடுயான்
உற்றநாள் உள்ள உளேன். 1206
யான் அவரோடு புணர்ந்த நாளின்பத்தை நினைத்தலால் இப்போது உயிர் வாழ்கின்றேன். அஃதின்றேல், யான் வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்புஅறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். 1207
முன் உண்டான புணர்ச்சி யின்பத்தை மறத்தலறியேனாகி, இப்போது நினைக்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடுகின்றது. இங்ஙனம் பிரிவாற்றாத யான் அதை மறந்தால் இருப்பது எதனால்? இதுவுமது.
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. 1208
நாம் எவ்வளவு நினைத்தாலும் அதற்கு வெகுளார். காதலர் எமக்குச் செய்யும் இன்பம் அவ்வளவன்றோ?
விளியும்என் இன்உயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைத்து. 1209
முன்பு நாமிருவரும் வேறெல்லாம் என்று சொன்னவருடைய அருளின்மையை மிகவும் நினைந்து, எனது இனிய உயிர் கழிகின்றது.
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. 1210
மதியே! வாழ்வாயாக. என் நெஞ்சில் இடைவிடாது இருந்து விட்டுப் போனவர்.
கண்ணினால் காணும் படி நீ மறையாதிருப்பாயாக.
No comments:
Post a Comment