January 6, 2020

பகை மாட்சி


பகை மாட்சி

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.    861

தம்மினும் வலியார்க்குப் பகையாகி அவர்களை எதிர்த்தலை ஒழிக. தம்மினும் மெலியார் மீது பகையாகி எதிர்த்தலை ஒழியாது விரும்புக.  

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.     862

ஒருவன் தன் சுற்றத்தின் மேல் அன்பில்லாதவன், அதுவேயின்றி வலிய துணையில்லாதவன், தானும் வலியில்லாதவன், இத் தகை யவன் தன்மேல் வந்த பகைவன் வலியினை எவ்வாறு தொலைப்பான்?

அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.      863

ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், அறிய வேண்டிய வற்றை அறியான், பிறரோடு பொருத்தமில்லாதவன், பிறர்க்கு ஒன்றும் கொடாதவன், இப்படிப்பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளிய வனாவான்.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.           864

ஒருவன் வெகுளி நீங்கானாய், பிறரறியாமல் மனத்தில் மறைத்து வைக்க வேண்டிய தொன்றை மறைத்து வையாதவனை, அவனை வெல்லுதல் எப்போதும் யார்க்கும் எளிதாகும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.          865

ஒருவன் பின் வருவனவற்றை எண்ணிப் பாரான், வெல்வதற்கு வேண்டியவற்றைச் செய்து கொள்ளான், தனக்கு வரும் பழியையும் பாரான், நற்குணமில்லாதவன், அவன் பகைவர்க்கு அப்பகை இனியதாகும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.        866

ஒன்றையும் பாராத வெகுளியை உடையவனும், மிகப் பெரிய ஆசையையுடையவனும் ஆகியவனது பகைமை விரும்பிக் கொள்ளப் படும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற  அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை.      867

பகையை உற்றிருந்தும் அப்பகை வெல்வதற்கு ஏலாதன செய்வான்  பகையை, சில பொருளைக் கொடுத்தாயினும் கட்டாயங் கொள்ள வேண்டும்.

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து.            868

ஒருவன் நற்குண மொன்றும் இல்லாதவனாய், குற்றங்கள் பல உள்ளனவாயின், அவன் துணை இல்லாதவனாவான், அத்துணை யின்மை அவன் பகைவர்க்குத் துணையாவதை உடையது.

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சம் பகைவர்ப் பெறின்.     869

அறிவில்லாத அஞ்சுந்தன்மையுள்ள பகைவரைப் பெற்றால், அவரை வெல்வார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்காவாம்.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.  870

அறநூல்களைக் கல்லாதவனுடன் பகைத்தலால் வரும் எளிய பொருளை அடையாதவனை, எப்போதும் புகழ் அடையாது.  

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...