கேள்வி
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. 411
செல்வங்களுள் சிறந்த செல்வமாவது கேள்வி.
அக்கேள்விச் செல்வமானது மற்றைச் செல்வங்கள் எல்லாவற்றினும் முதன்மை யானது.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412
செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத போது, வயிற்றுக்கும் சிறிது கொடுக்கப்படும்.
செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்தது. 413
செவியுணவாகிய கேள்வியினை உடையவர், நிலத்தில் குறைந்த உணவினையுடைய நிறைந்த அறிவினையுடையவரை ஒப்பர்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 414
கற்க வேண்டிய நூல்களைக் கற்றிலனாயினும் அவற்றைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க வேண்டும். அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போன்ற துணையாகும்.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். 415
நல்லொழுக்கம் உடையவரது வாயிலிருந்து வரும் சொல், வழக்கு தலையுடைய இடத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் போன்றது.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416
எவ்வளவு சிறிதாயினும் நல்ல கேள்விகளைக் கேட்க, அவ்வளவே ஆயினும் அக்கேள்விகள் மிகுந்த பெருமையைக் கொடுக்கும்.
பிழைத்துணர்ந்தும்
பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். 417
நுண்ணியதாக ஆராய்ந்தறிந்ததோடு மிகுந்த கேள்வியறிவினை யும் உடையவர். தப்பாக உணர்ந்தாலும் அறிவுக்குப் பொருந்தாத சொற்களைச் சொல்லார்.
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418
பெரியோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவிகள், கேட்பினும் செவிடாந் தன்மையே யாகும்.
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419
நுட்பமாகிய கேள்வியைக் கேளாதவர், பணிந்த மொழியை உடையர் ஆவது இல்லை.
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420
காதுகளால் நுகரும் இன்பத்தை உணராது வாயால் நுகரும் இன்பத்தை மட்டும் உணர்வார். இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகத்தாருக்கு வருவது என்ன?
No comments:
Post a Comment