January 6, 2020

வெகுளாமை


வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.         301

வெகுளி செல்லுமிடத்தில் அதைத் தடுப்பவனே தடுப்பவனா வான். சினம் செல்லாத இடத்தில் தடுத்தால் என்ன? தடுக்கா விட்டால் என்ன?

செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல் அதனின் தீய பிற.  302

தன்னால் யாதொன்றும் செய்யமுடியாத வலியார் மேல் எழும் வெகுளி தனக்கே தீதாம். மெலியார் மேலெழினும் அதைவிடத் தீயவை பிற இல்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.      303

வெகுளியை யாரிடத்தும் ஒழிக. வெகுளியால் தீயவை உண்டாகும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. 304

சிரிப்பையும் மகிழ்ச்சியையும் போக்கும் சினத்தைப் போல, ஒருவனுக்கு வேறு பகையும் உண்டோ? இல்லை.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.          305

ஒருவன் தன்னைத்தானே காக்க நினைக்கின் சினமெழாத படி தடுக்கக் கடவன். தடுக்காவிடில் அவ்வெகுளி அவனையே மிகவும் துன்புறுத்தும்.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.          306

சினம் என்னும் நெருப்பு, துன்பக் கடலில் அழுந்தாமல் தன்னைக் கரையேற்ற வல்ல இனமாகிய பாதுகாப்புப் புனையையும் சுடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.            307

வெகுளியைத் தனக்குரிய குணமென்று கொண்டவன் கெடுதல், நிலத்தில் அடிப்பவன் கை அந்நிலத்தில் படுதல் தப்பாது போல் தப்பாது. 

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.            308

கொழுந்துவிட்டெரியும் தீப்பந்தத்தால் சுடுவது போன்ற துன்பங்களை ஒருவன் மேன்மேலும் செய்தாலும், பின்னர் வருவானாயின் வெகுளாதிருப்பது நல்லது.

உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.      309

ஒருவன் தன் நெஞ்சில் வெகுளியை நினையான் என்றால், அவன் எண்ணிய யாவும் ஒருங்கே பெறுவான்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.   310

மிக்க சினத்தையுடையவர் உயிருடன் இருப்பினும் செத்தாரை ஒப்பர். வெகுளியைத் துறந்தார் சாகுத் தன்மையராயினும் அச்சாவை ஒழிந்தாரை ஒப்பர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...