மக்கட் பேறு
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61
நாம் பெறும் பேறுகளுள், அறிவுடைய மக்கட் பேற்றைவிடச் சிறந்த பேறு வேறொன்றிருப்பதாக நாம் கண்டதில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62
குற்றமற்ற நன் மக்களைப் பெற்றால், ஏழு தலைமுறைகளிலும் தீமைகள் சேரா.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63
மக்கள் தேடும் பொருள், அவரவர் தொழிலுடனே பெற்றோர் பால் வரும் ஆதலால், தம் மக்களைத் தம்பொருள் என்பர் அறிவுடை யோர்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64
தம் குழந்தைகள் சிறிய கைகளால் கலக்கிய கூழ், பாற் சோற்றை விட மிக இனிமையாக இருக்கும்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65
மக்கள் தமது உடம்பைத் தீண்டுதல் உடலுக்கு இன்பந் தரும். மக்கள் மழலைச் சொல்லைக் கேட்டல் காதுக்கு இன்பந் தரும்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66
தம் மக்களுடைய மழலைச் சொல்லைக் கேளாதவர், குழலின் இசை இனிது, யாழின் இசை இனிது என்பர்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67
தந்தை மகனுக்குச் செய்யும் உதவியானது, அவனைப் பெரியோர் அவையின்கண் யாவர்க்கும் முன்பு தலைவனாக வீற்றிருக்கச் செய்வதே.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68
பெற்றோராகிய தம்மைவிடத் தம் மக்கள் அறிவுடையராய் இருத்தல், இப்பெரிய உலகில் வாழும் மக்கள் யாவர்க்கும் இன்பந் தரும்.
ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69
தன் மகனை அறிவில் நிறைந்ததோனென்று அறிவுடையோரால் சொல்லக்கேட்ட தாய், பெற்ற பொழுதைவிடப் பெரிதும் மகிழ்வாள்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல். 70
மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாவது, இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன நன்மை செய்தானோ? என்று அறிவுடையோர் புகழ்ந்து சொல்லும் சொல்லேயாகும்.
No comments:
Post a Comment