பொறை உடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151
தன்னைத் தோண்டுபவர்களை வீழாமல் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவர்களைப் பொறுத்தல் தலைமையாகிய அறம்.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152
எப்போதும் பிறர் செய்த குற்றத்தைப் பொறுக்க, அக்குற்றத்தை அப்பொழுதே மறத்தல், அப்பொறுமையை விட நல்லது.
இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது வீடு தேடிவந்த விருந்தினரை நீக்குதல். அதுபோல வன்மையுள் வன்மையாவது அறியாதார் செய்த குற்றத்தைப் பொறுத்தல்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். 154
ஒருவன் தன் பெருங்குணம் தன்னை விட்டு நீங்காதிருக்க விரும்பினால், பொறுமையைப் பாதுகாத்து நடக்க வேண்டும்.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. 155
பிறன் தமக்குச் செய்த தீமையைப் பொறாது அவனைத் தண்டித் தவர்களை ஒரு பொருளாக உலகோர் மதியார். அவன் செய்த தீமையைப் பொறுத்தவர்களைப் பொன்னைப் பாங்காகப் போற்றுதல் போலப் போற்றுவர்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 156
தமக்குத் தீமை செய்தவனை ஒறுத்தவர்க்கு அவ்வொரு நாள் இன்பமே. பொறுத்தவர்க்கு இறக்குமளவும் புகழ் நிலைக்கும்.
திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று. 157
தகுதியல்லாதவற்றைத்
தனக்குப் பிறர் செய்தாலும், அவற்றைத் திருப்பிச் செய்தால் அவர்க்கு உண்டாகும் துன்பத்திற்கு நொந்து, அறமல்லாதவற்றை அவர்க்குச் செய்யாமலிருப்பது நல்லது.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். 158
தம்மைவிடச் செல்வம், உடல்வலி முதலியன மிகுதியால் தமக்குத் தீங்கிழைத்தவரை, தாம் தமது பொறையால் வெல்லக்கடவர்.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159
நன்னெறியைக் கடந்தவரது வாயிலிருந்து வரும் தீச் சொற்களைப் பொறுப்பவர், தீயவற்றைத் துறந்தோரினும் தூய்மையுடையவ ராவர்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160
பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுப்பவருக்குப் பிறகே, உணவை நீக்கியதால் உற்ற நோயைப் பொறுப்பவர் பெரியராவர்.
No comments:
Post a Comment