வாழ்க்கைத் துணைநலம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51
மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கை உடையளாகி, தன்னை மனைவியாகக் கொண்டவனது வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்பவளே நல்ல மனைவியாவாள்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 52
ஒருவன் மனைவியிடத்து இல்லறத்துக்கு வேண்டிய நல் லொழுக்கம் இல்லையாயின், அவ்வில் வாழ்க்கை எவ்வளவு பெருமையுடையதாயினும் உடையதன்று.
இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை. 53
மனைவி நற்குண நற்செய்கை உடையவளானால் ஒருவனுக்கு இல்லாதது யாது? மனைவி நற்குண நற்செய்கை இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது யாது? ஒன்றுமில்லை.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்புஎன்னும்
திண்மையுண் டாகப் பெறின். 54
கற்பு என்னும் மனவுறுதி உண்டானால், மனைவியைவிட மேம் பட்ட பொருள் ஒருவனுக்கு எவை உள்ளன? ஒன்றுமில்லை.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யும் மழை. 55
தங் கணவனைவிட மேலானதென ஒன்றை எண்ணாள், தன் கணவனையே எண்ணி அவ்வெண்ணம் மிகுவாள், பெய்யயன்று கூறினால் மழை பெய்யும்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56
மனவுறுதியால் தன்னைக் காத்து, கணவனைப் போற்றி, தகுதி மிக்க புகழையும் காத்து, மனச் சோர்வு இல்லாதவளே நல்ல மனைவி யாவாள்.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57
பெண்களை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே வைத்துக் காப்பதால் பயனில்லை. பெண்கள் மனவுறுதியால் தங்களைக் காத்துக் கொள்ளும் காவலே சிறந்தது. பெண்களுக்கு உறுதியான மனவொருமைப்பாடு வேண்டும்.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58
கணவரை மனவுறுதி உடையராகப் பெற்றால், தேவருலகில், பெண்கள் பெரும் சிறப்பை அடைவர்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 59
புகழை விரும்பிய மனைவியை அடையாதவர்க்கு, தம்மைப் பழிப்பார்முன் அரியேறு போல நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60
மனைவியின் நல்லொழுக்கத்தை மனையறத்திற்கு மங்கலம் என்பர், நல்ல மக்களைப் பெறுதலை அம் மனையறத்தின் அணிகலம் என்பர் அறிவுடையோர்.
No comments:
Post a Comment