January 3, 2020

நிறை அழிதல்

நிறை அழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.      1251

நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவை, காமமாகிய கோடரி உடைத்து விடும். இனி அவை நிற்றலும் இல்லை. நாண்  ஆற்றலும் இல்லை.       

காமம் எனஒன்றோ கண்ணின்றுஎன் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.   1252

காமம் என்ற ஒன்ற ஐயோ! கண்ணோட்டமில்லாததாக இருக்கின்றது. அது என் நெஞ்சத்தை எல்லோரும் தொழிலொழியும் நடு இரவிலும் தொழில் கொள்கின்றது.     
  
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.         1253

இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன். அது என் எண்ணத்தின்படி மறைந்து நிற்காமல் தும்மல் போல் வெளிப்பட்டே விடுகின்றது.    
   
நிறையுடைடியேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறைஇறந்து மன்று படும்.      1254

இதுவரைக்கும் யான் என்னை நிறையுடையேன் என்று எண்ணியிருந்தேன். ஆனால், இப்போது எனது காமம் தனது மறைவிடத்தைக் கடந்து அவையின்கண் வெளிப்படுகின்றது.      

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.        1255

தம்மைப் பிரிந்து சென்றார்பின் செல்லாத நிறையுடைமை, காம நோய் உற்றவரால் அறியப்படுவது ஒன்றன்று.       

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றுஎன்னை உற்ற துயர்.      1256

என்னை விட்டுச் சென்றவர் பின்னே யான் செல்வதை விரும்புத லால், என்னை வந்தடைந்த துன்னபமானது எத்தகையது! மிக நன்றாயிருக்கிறது
     
நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.      1257

நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்புவன வற்றைச் செய்தால், நாணம் என்ற ஒன்றையும் அறிய மாட்டோம்.    
  
பல்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. 1258

நமது நிறையாகிய அரணை உடைக்கும் படையானது, பல பொய்களில் வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ?      

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.        1259

அவர் வந்தால் பிணங்குவேன் என்று எண்ணிப் பிறிதோரிடம் சென்றேன். அவ்வாறு சென்றும் எனது நெஞ்சம் நிறையில் நில்லாது அறை போய் அவரோடு கலப்பதைக் கண்டு அவரைத் தழுவிக் கொண்டேன்.  
    
நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்துஊடி நிற்பேம் எனல்.           1260

கொழுப்பைத் தீயிலிட்டால் அது உருகுமாறு போலத் தங் காதலரைக் கண்டால் நிறையழிந்துருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்குகாதலர் தம்மை நெருங்கத் தாம் ஊடிப் பின் உணராது நிற்பேம் என்று கூறுதல் உண்டாகுமோஆகாதுயான் அத்தன்மை யேன் ஆகலின் என்னால் அவ்வாறு நிற்க முடியாதென்பதாம்


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...