January 6, 2020

செய்ந்நன்றி அறிதல்


செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.    101

தான் முன்பு ஓர் உதவி செய்யாதிருக்கத் தனக்கு ஒருவன் செய்த உதவிக்கு, வையகத்தையும் வானகத்தையும் கைம்மாறாகக் கொடுக்கி னும் ஒப்பாகாது.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.    102

தக்க காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும், பயனை நோக்க உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.          103

தனக்குப்பின் வரும் பயனை நோக்காராய்ப் பிறர்க்குச் செய்த உதவியின் மேன்மையை ஆராய்ந்து பார்க்கின், அதன் நன்மை கடலை விடப் பெரிதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.      104

தினையளவு உதவி செய்யினும், அவ்வுதவியின் பயனை அறிபவர் அதைப் பனையளவாகக் கொள்வர்.

உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செயல்பட்டார் சால்பின் வரைத்து. 105

ஒருவர் செய்த உதவி, அவ்வுதவியின் அளவினதன்று. அவ் வுதவியைப் பெற்றவரது தன்மையின் அளவினதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்புஆயார் நட்பு.           106

குற்றமற்றவரது நட்பை மறவற்க. துன்பம் வந்த காலத்து உதவி னாரது நட்பை விட்டுவிடற்க.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.   107

தமக்குற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை, அறிவாளிகள் எப்போதும் நினைப்பர்.

நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.           108

பிறர் செய்த உதவியை மறப்பது நல்லதன்று. தீமையை அப்போதே மறந்து விடுவது நல்லது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

முன்பு தமக்கு உதவி செய்தவர் பின்பு கொன்றாலன்ன தீமைகள் செய்தாலும், அவர் முன்பு செய்த ஒருதவியை நினைக்க அத்தீமைகள் அனைத்தும் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம்   உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.           110

எவ்வகைப்பட்ட அறங்களைக் கெடுத்தவர்க்கும் பின்பேனும் பிழைப்பு உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு எப் போதும் பிழைப்பு இல்லை.


No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...