January 3, 2020

நலம் புனைந்து உரைத்தல்


நலம் புனைந்து உரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.    1111

அனிச்ச பூவே! நீ வாழ்வாயாக. மென்மையால் நீ எல்லா பூக்களிலும் நல்ல இயற்கையை உடையாய். எம்மால் விரும்பப் படுபவள் உன்னைக் காட்டிலும் மெல்லிய இயற்கையை உடையாள்.    

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்னு.   1112

நெஞ்சமே! இவள் கண்களைப் பலராலும் பார்க்கப்படும் மலர்கள் ஒக்கும் என்று நினைத்து, நீ பலவகை மலர்கள் ஒக்கும் என்று நினைத்து, நீ பலவகை மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்! உன் அறிவருந்தவா றென்னே! 
 
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு.         1113

மூங்கில் போலும் தோளினை உடையவளுக்கு, நிறம் தளிர் போன்றது. பல் முத்துப் போன்றது. இயற்கை மணம் நறுமணமாக இருக்கும். மையுண்ட கண் வேல் போன்றது.    

காணிற குவளைகவிழ்ந்து நிலன்நோக்கும்
மாண்இழை கண்ஒவ்வேம் என்று. 1114

குவளைப் பூக்கள், காணும் ஆற்றலுடைனவாயின், மாட்சிமைப் பட்ட அணிகளை உடையவளது கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி நாணத்தினால் தலை குனிந்து நிலத்தைப் பார்க்கும்.  

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்  நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.        1115

இவளுடைய மென்மை கருதாது அனிச்சப்பூவைக் காம்பு நீக்காது கூந்தலில் சூடினாள். இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலிக்க மாட்டா.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.            1116

வானத்திலுள்ள மீன்கள் மதிக்கும் எம் மடந்தை முகத்திற்கும் வேறுபாடு காண மாட்டாமல், தம் நிலையினின்றும் கலங்கித் திரிகின்றன. இரவுக் குறிக்கண் மதி கண்டு சொல்லியது.  

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. 1117

முன் குறைந்த கலை நிறைந்த ஒளிர்மதிக்குப் போல, இம்மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? 

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.        1118

மதியே! வாழ்வாயாக! யான் மகிழும்படி இம்மாதர் முகம் போல ஒளிவீச வல்லையாயின் நீயும் என் காதலை உடையையாவாய்.   

மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர் காணத் தோன்றல் மதி.  1119

மதியே! இம்மலர் போலும் கண்களை உடையவளது முகத்தை நீ ஒத்திருக்க வேண்டுவாயாயின், நீ பலர் காணத் தோன்றற்க. நான் காணும்படியாக மட்டும் தோன்றுவாயாக! 

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.        1120

உலகத்தாரால் மென்மைக் கெடுத்துக் காட்டப்படும் அனிச்சப் பூவும் அன்னப்பறவையின் சிறகுமாகிய இரண்டும், இம்மாதரின் அடிக்கு நெருஞ்சி முட் போல வருத்தஞ் செய்யும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...