January 6, 2020

அரண்


அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.                       741

கோட்டையானது, பகைமேற் செல்லும் வலிவுடை யார்க்கும் சிறந்தது. தம் மேல் வருவார்க்கு அஞ்சித் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணுவார்க்கும் சிறந்தது. 

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது  அரண்.                           742

மணி போன்ற நிறத்தினையுடைய தெளிந்த நீரும், நீரும் நிழலு மற்ற நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய நாடும் உடையது அரணாகும். 
 
உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்.           743

உயர்வும் அகலமும் வலுவும் அருமையும் ஆகிய இந் நான்கும் அமையப் பெற்றது, மதில் என்று சொல்லுவர் நூலோர். 

சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி, உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.                           744

காக்க வேண்டிய இடம் சிறிதாய் மதிலகம் பெரிய இடத்தை உடையதாய், மதில் முற்றிய பகைவரது ஊக்கத்தை கெடுப்பதே அரணாகும். 

கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண்.                    745

புறத்தாரால் கைக்கொள்வதற்கரிதாய், அகத்தார்க்கு நெடு நாளைக்கு வேண்டிய உணவைத் தன்னகத்தே கொண்டதாய், அகத்தாரது போர் நிலைக்கு எளிதாய தன்மையை உடையதே அரணாகும்.

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்லாள் உடையது அரண்.                           746

அகத்தார்க்கு வேண்டும் பொருள்களெல்லாவற்றையும் உள்ளே உடையதாய், புறத்தோரால் மதில் அழிவெய்த நேரும்போது அழிவெய்தாமல் உதவிக் காக்கும் நல்ல வீரரையு முடையதே அரணாகும்.

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.                              747

புகலொடு போக்கொழியும் வகை நெருக்கமாகச் சூழ்ந்தும், அங்ஙனம் சூழாமல் தளர்ந்த இடம் பார்த்து ஒரு முகமாகப் பொருதும், நம்பிக்கையுடையோரை விட்டு அகத்தோர் மனத்தை மாற்றி வாயிற் கதவை திறப்பித்தும், புறத்தோரால் கொள்ளுதற் கரியதே அரணாகும்.

முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.                         748

படைப்பெருமையால் மதிலை முற்றவல்லராய் வந்து முற்றிய புறத்தோரையும், தன்னைப் பற்றி நின்று காக்கவல்ல அகத்தோர் தரம்பற்றி நின்ற இடத்தை விட்டுப் பெயராமல் நின்று பொருது வெல்வதே அரணாகும். 

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி  மாண்டது அரண்.                        749

போர் தொடங்கினவுடனே பகைவர் மனம் தளர்ந்து ஓடும்படி, அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளால் சிறப்புற்று மற்றும் வேண்டிய மாட்சியுடையதே அரணாகும்.

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.                       750

எவ்வளவு, பெருமையுடையதாகியவிடத்தும், செய லாற்றும் திறமை இல்லாதாரிடம் அவ்வரண் இல்லாததாகும். பகைவரால் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...