அலர் அறிவுறுத்தல்
அலர்எழ ஆர்உயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால். 1141
எம் இருவர்க்குமுள்ள காதலன்பு ஊரின் கண் அலரா யயழுதலினால் எனது உயிர் நிலை பெற்றிருக்கிறது. என்னுயிர் நிற்பதை நல்ல வேளையாக ஊரிலுள்ள பலரும் அறிய மாட்டார்கள். அறிந்தால் அலர் தூற்றார். அதனால், என்னுயிர் போம் என்பது கருத்து.
மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர். 1142
மலர் போலும் கண்ணையுடையவளை நான் அடைய முடியாத அருமையை அறியாமல், இவ்வூர் அலர் கூறி அவளை எளியளாக்கி எமக்க உதவியது.
உறாஅதோ ஊர்அறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1143
எங்களுக்குக் கூட்டம் உண்மையை இவ்வூர் அறிதலால் உண்டான அலரானது எமக்குக் கேட்காதோ? அது கேட்ட என் மனம் அக் கூட்டத்தைப் பெறாமலிருந்தும் பெற்ற போது உண்டாகும் இன்பம் போலும் இன்பம் உடையது.
கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. 1144
என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரினால் அலர்தலை யுடையது. அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பையிழந்து சுருங்கி விடும்.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது. 1145
கள்ளுண்பார்க்கு களிக்கந்தோறும் கள்ளுண்டல் இன்பந் தருவது போலும், காமம் அலராகுந் தோறும் எனக்கு இனிதாக இருக்கின்றது.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. 1146
நான் காதலரைக் கண்டது ஒரு நா¼ள் அதனாலாகிய அலர் திங்களைப் பாம்பு கொண்ட அலர்போல ஊரெங்கும் பரவியது.
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். 1147
இக் காமநோயாகிய பயிர், ஊரார் கூறும் அலர் எருவாகவும், அது கேட்டு அன்னை கூறுகின்ற கடுஞ் சொல் நீராகவும் வளருகின்றது.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். 1148
ஊரார் கூறும் அலரினால் நாம் காமத்தை அவிப்போம் என்று கருதுதல், நெய்யால் எரி நுதுப்பேம் என்று கருதுவதனோடொக்கும்.
அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. 1149
தம்மை எதிர்ப்பட்ட போது, நின்னைப் பிரியேன்; அஞ்சுதலை ஒழிவாயாக என்று தலைவரே இன்று கண்டார் பலரும் நாணும் வகை எம்மை விட்டு நீங்கிய பின், ஊரார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாது.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். 1150
உடன்போக்குக்குத்
துணை செய்தல் கருதி யாம் முன்பே விரும்பும் அலரை இவ்வூர் தானே எடுக்கின்றது. இனி எம் காதலரும் யாம் விரும்பினால் அவ்வுடன் போக்கை எளிதில் ஒப்புக் கொள்வர்.
No comments:
Post a Comment