ஒப்புரவு அறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. 211
மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்கின்றது? ஒன்றும் இல்லை. அதுபோல, உதவி செய்யும்போது எதிருதவிகளை எண்ண வேண்டாம்.
தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212
ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உதவுவதற்காகவே.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 213
ஒப்புரவைக் காட்டிலும் நல்ல வேறு செயல்களை, வானுலகத்தும் மண்ணுலகத்தும் பெற முடியாது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 214
ஒப்புரவை அறிந்து செய்பவனே உயிருடன் கூடி வாழ்பவனா வான். ஒப்புரவு செய்யாதவன் உயிருடன் இருப்பினும் இறந்தவருள் ஒருவனாகவே கருதப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு. 215
ஒப்புரவு செய்தலை விரும்பும் பெரிய அறிவாளனது செல்வம், ஊரார் குடிக்கின்ற கிணறு நீர் நிறைந்தாற் போலும்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். 216
செல்வம் ஒப்புரவு செய்பவனிடத்து உண்டாகுமாயின், அது யாவர்க்கும் பயன்படும் ஓர் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போலும்.
மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 217
செல்வம் பெருங்குணம் உடையோனிடம் சேருமாயின், அது பிணிக்கு மருந்தாகித் தப்பாத மரத்தை ஒக்கும்.
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர். 218
செய்யத் தக்கவற்றை அறிந்த அறிவினர், செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தயங்கார்.
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு. 219
ஒப்புரவு செய்பவன் வறியவனாவது, செய்யத்தக்கவற்றைச் செய்யாது முடியாத வழியாம்.
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து. 220
No comments:
Post a Comment