January 3, 2020

கண்விதுப்பு அழிதல்


கண்விதுப்பு அழிதல்

கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.       1171

இத்தீராத நோயை யாம் அடைந்தது எம் கண்கள் காதலரை எமக்குக் காட்டியதால் அன்றோ? அன்று எமக்குக் காட்டிய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுவது எதற்காகவோ?    

தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைல் உழப்பது எவன்.  1172

பின் விளைவதை ஆராய்ந்து அறியாமல் அன்று காதலரைக் கண்ட மையுண்ட கண்கள், இன்று இத்துன்பம் நம்மால் வந்ததென உணராது துன்புறுவது எதற்காக?   

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து.     1173

இக்கண்கள் முன்பு காதலரைத் தாமே விரைந்து நோக்கி, இப்போது தாமே அழுகின்ற இது, நம்மால் சிரிக்கத் தக்க இயல்பினை உடையது.  

பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.     1174

மையுண்ட கண்கள், நான் பிழைக்க முடியாதபடி ஒழிவில்லாத நோயை என்னிடம் நிறுத்தி, தாமும் அழ முடியாதபடி நீர் வற்றின. 
   
படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.    1175

எனக்குக் கடலினும் பெரிய காம நோயை உண்டாக்கிய என் கண்கள், தூக்க மில்லாதனவாகித் துன்பத்தால் வருந்துகின்றன.    

ஓஒ  இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
தாஅம் இதன்பட் டது.     1176

எமக்கு இக்காமநோயை உண்டாக்கிய கண்கள் தாமும் தூங்காமல் அழ நேர்ந்தது, மிகவும் இனிதாயிற்று.    

உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்துஇழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.  1177

விரும்பி உள் நெகிழ்ந்து விடாமல் அன்று காதலரைக் கண்ட கண்கள், இன்று துயிலில்லாத் துன்பத்தால் வருந்தித் தம்முள் இருக்கும் நீர் அற்றுப் போவதாக.    

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.      1178

நெஞ்சினால் விரும்பாது, சொல்லினால் விரும்பினவர் இங்கு இருக்கின்றனர். இருந்து பயனென்ன? அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறல் இல்லை. 
   
வாராக்கால் துஞ்சா வின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.     1179

தலைவர் வாராத போது அவர் வரவு பார்த்துத் தூங்கா. வந்த போது அவர் பிரிவஞ்சித் தூங்கா. அவ்விரு வழியிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பம் உற்றன.    

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.  1180

எம்மைப் போல அறையப்படும் பறையாகிய கண்ணினை யுடையார் தம் நெஞ்சில் மறைக்கப்படும் மறை பொருள்களை அறிதல், இவ்வூரார்க்கு எளிது.    

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...