இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 41
குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று கூறப்படுவோன், அறத்தின் தன்மையுடைய மூவர்க்கும் நல்ல வழியில் நிலைபெற்ற துணை யாவான். இயல்புடைய மூவர் - அடுத்த குறளில் கூறப்படும் மூவர்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. 42
துறவிகளுக்கும், வறுமையினால் உண்ண உணவின்றித் தவிக்கும் ஏழைகட்கும், பாதுகாப்போர் இல்லாதவர்க்கும் இல்வாழ்க்கை நடத்துபவன் துணையாவான்.
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43
தென்னாட்டினர், தன் முன்னோர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்திடத்தும் அறவழியைத் தவறாது செய்தல் இல் வாழ்வானுக்குச் சிறந்தது.
பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44
பிசினன் என உலகம் பழிக்கும் பழியை அஞ்சி, பிறர்க்குப் பங்கிட்டு உண்ணுவதை உடையதாயின், இல்வாழ்க்கை நெறி எப்போதும் குறைதல் இல்லை. பிசினன்- உலோபி.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 45
இல்வாழ்க்கையானது
யாவரிடத்தும் அன்பு செய்தலையும், அறஞ்செய்தலையும் உடையதாயின், அதுவே இல்வாழ்க்கையின் தன்மையும் பயனுமாகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன். 46
ஒருவன் நல்ல வழியில் குடும்பம் நடத்துவானாயின், அவன் வேறு வழிகளில் போய் அடைவது ஒன்றுமில்லை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. 47
நல்ல முறையில் குடும்பம் நடத்தி வருபவன், முயற்சியுடன் வாழ்வார் யாவரினும் மேம்பட்டவனாவான்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 48
பிறரையும் நல்ல வழியில் நடக்கச் செய்து, தானும் தன் ஒழுக்கத்தில் தவறாது வாழ்வான் இல்வாழ்க்கையானது, தவம் செய்வோர் நிலையைக் காட்டிலும் வலியுடையது.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. 49
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல் வாழ்க்கையே. அவ்வில் வாழ்க்கையும் வேறொருவனால் பழிக்கப்படுவதில்லை யாயின் நல்லதாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். 50
உலகில் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துபவன், வானுலகில் வாழும் தேவர்களைப் போலச் சிறப்பாக மதிக்கப்படுவான்.
No comments:
Post a Comment