January 6, 2020

நல்குரவு


நல்குரவு
இன்மையின்ட இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.         1041

ஒருவனுக்கு வறுமையைக் காட்டிலும் துன்பந்தருவது எது வென்றால், வறுமை போலத் துன்பந் தருவது வறுமையே, வேறில்லை.

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.       1042

வறுமையயன்று சொல்லப்படுவதொரு பாவி, ஒருவனிடம் வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். 

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நகை.         1043

வறுமை என்னும் ஆசையானது, தொன்று தொட்டு வருகின்ற குடிப்பிறப்பையும் அதற்குரிய சொல்லையும் ஒருங்கே கெடுக்கும். 

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இனிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.           1044

வறுமையானது, நற்குடிப் பிறந்தாரிடத்தும், இழிவுக்குக் காரணமான சொற்கள் பிறக்கும் சோர்வினை உண்டாக்கும். 

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.       1045

வறுமை என்னும் துன்பமொன்றினால், பல துன்பங்களும் வந்து தோன்றும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். 1046

உண்மைப் பொருளை நன்கு அறிந்து கூறினும், வறியவர் கூறும் சொல் பொருளற்றதாகவே முடியும். 

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.   1047

அறத்துடன் பொருந்தாத வறுமையாளன், தன்னைப் பெற்ற தாயானாலும் அயலான் போலக் கருதப்படுவான். 

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.      1048

நேற்றும் வந்து என்னைக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமைத் துன்பம் இன்றைக்கும் என்னிடம் வரக்கூடுமோ? வந்தால் என் செய்வேன்!

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.         1049

நெருப்பின் நடுவில் ஒருவன் தூங்குவதும் கூடும், ஆனால் வறுமையின் நடுவில் யாதொரு வழியினாலும் தூங்க முடியாது.

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.            1050

நுகரப்படும் பொருள்கள் இல்லாதவர் முற்றத்துறவாது வருந்துதல், பிறர் வீட்டிலுள்ள உப்புக்கும் காடிக்கும் கேடாவர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...