ஆள்வினை உடைமை
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 611
இச்செயல் நம்மால் செய்ததற்கு அருமையுடையது என்று எண்ணி மனந்தளராதிருத்தல்
வேண்டும். அதை முடித்தற்கேற்ற பெருமையை நமக்கு முயற்சியானது உண்டாக்கும்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612
வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. ஆதலால், செய்யப்படும் வினைக்கண் தவிர்த்திருத்தலை ஒழிக.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. 613
எல்லோருக்கும் உதவி புரிதல் என்னும் மேம்பாடு, முயற்சி என்னும் உயர்ந்த குணத்தின்கண் தங்கியுள்ளது.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக்கெடும். 614
முயற்சியில்லாதவன்
உதவியாளனாகுந்தன்மை, படையைக் கண்டஞ்சும் பேடி தன் கையிலுள்ள வாளை ஆளுந்தன்மை இல்லாதது போல இல்லையாகும்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண். 615
தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினை முடித்தலையே விரும்புவோன், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கும் தூணாவான்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 616
முயற்சி செல்வத்தை வளர்க்கும், முயற்சி இல்லாமை வறுமையுள் செலுத்தி விடும். முயற்சியின்மை வறுமையையும் உண்டாக்கும்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். 617
கரிய மூதேவி ஒருவனது சோம்பலின் கண்ணே இருப்பாள். திருமகள் சோம்பலில்லாதவன் முயற்சியின் கண்ணே இருப்பாள் என்று கூறுவர் அறிவுடையோர்.
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி. 618
செல்வமில்லாமை யாவருக்கும் பழியாகாது, அறிய வேண்டுவன வற்றை அறிந்து முயற்சியில்லாதிருத்தலே பழியாகும்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 619
முயற்சி ஊழின்படி கருதிய பயனைக் கொடுக்காதாயினும், தன் உடம்பை வருத்திய வருத்தத்தின் அளவு கூலி கொடுக்கும். வீண் போகாது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். 620
தளர்வில்லாமல் குறையாது முயற்சி செய்பவர், ஊழையும் புறங்காட்டி ஓடச் செய்வர்.
No comments:
Post a Comment