January 6, 2020

அழுக்காறாமை


அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.    161

ஒருவன் தன் மனத்தின்கண் பொறாமை இல்லாத தன்மையை ஒழுக்க நெறியாகக் கொள்ளக்கடவன்.

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.     162

யாரிடத்தும் பொறாமையின்மையை ஒருவன் பெறுவானால், சிறந்த பேறுகளுள் அதற்கு நிகரானது இல்லை.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.    163

அறமும் பொருளும் தனக்கு வேண்டாதவன் என்று சொல்லப் படுவான், பிறன் செல்வங்கண்டு பொறாது பொறாமைப்படுவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.          164

தீயவை செய்யின் குற்றம் உண்டாதலை அறிந்து, பொறாமை யினால் அறமல்லாதவற்றைச் செய்யார்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.       165

அழுக்காறு, பகைவரைவிடக் கேடுதருவதொன்றாகலின், பொறாமை யுடையார்க்குக் கேடு தருவதற்குப் பகைவர் வேண்டிய தில்லை. அப்பொறாமையே போதும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.            156

பிறர்க்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப்படு பவனது சுற்றமும் உடையும் உணவும் இன்றிக் கெடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.  167

பொறாமையுடையவனை, இளையவள் பொறாமைப்பட்டு மூத்தவளுக்குக் காட்டித் தான் நீங்குவாள்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.     168

பொறாமை என்னும் ஒப்பற்ற தீயோன், செல்வத்தையுங் கெடுத்துத் தீமையுள் செலுத்தி விடுவான்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.         169

பொறாமைக்காரனது ஆக்கமும், பொறாமையில்லாதவனது கேடும் ஆராயத்தக்கது.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.        170

பொறாமைப்பட்டுப் பெருக்கமடைந்தவரும் இல்லை. பொறாமை இல்லாதவருள் பெருக்கத்தினின்று நீங்கினவரும் இல்லை.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...