ஊக்கம் உடைமை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையது உடையரோ மற்று. 591
ஒருவரை உடையர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது ஊக்கம். அவ்வூக்கம் இல்லாதவர் வேறு பொருளை உடைமை தானும் உடையவர் ஆவரோ? ஆகார்.
உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். 592
ஊக்கமுடைமை ஒருவனுக்கு நிலையான உடையாகும். ஏனைப் பொருளுடைமை நிலைபெற்று நில்லாது நீங்கிவிடும். உள்ளம்- ஊக்கம்.
ஆக்கம் இழந்தோம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593
உறுதியான ஊக்கத்தைக் கைப் பொருளாக உடையார், இழந்தாரா யினும் கைப்பொருளை இழந்தேம் என்று வருந்த மாட்டார்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை. 594
தளராத ஊக்கமுடையவனிடத்து, செல்வமானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும்.
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. 595
நீர்ப்பூக்களின் தாள்களின் நீளம் அவை நிற்கும் நீரினது ஆழத்தின் அளவினவாகும். அது போல, மக்களது உயர்ச்சி அவரது ஊக்கத்தின் அளவினதாகும்.
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 596
ஒருவன் கருதுவதெல்லாம் தன் உயர்ச்சியையே கருதக் கடவன். அவ்வுயர்ச்சி கைகூடாவிடினும் கூடிய தன்மையுடையது.
சிதைவிடத்து ஒர்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு. 597
யானையானது பல அம்புகளால் புண்பட்ட போது தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும். அது போல, ஊக்கமுடையவர் தமது முயற்சிக்கு அழிவு வந்தபோது மனந்தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.
உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. 598
ஊக்க மில்லாதவர், இவ்வுலகத்தாருள் யாம் வண்மை யுடையேம் என்னும் மதிப்பை அடைய மாட்டார்கள்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599
யானை எல்லா விலங்குகளிலும் பெரியதும், கூர்மையான கொம்புகளையுடையதும், ஆயினும், புலியினால் தாக்கப்பட்டால் அதற்கஞ்சும்.
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு. 600
ஒருவனுக்குச் சிறந்த அறிவானது ஊக்க மிகுதி. அவ்வூக்கம் இல்லாதவர் மரத்துக்கு ஒப்பாவர். மக்கள் வடிவாதலே அம்மரத்திற் கும் இவர்க்குமுள்ள வேறுபாடு, வேறில்லை. ஊக்கமில்லாதவர் மரத்தோடொப்பர்.
No comments:
Post a Comment